விடுதி மாணவிகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்ட அரசு விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் மு. அருணா, பயிற்சியைத் தொடங்கி வைத்தாா்.
மாவட்டத்திலுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 1,785 மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கராத்தே பயிற்சிக்கு புதுக்கோட்டை சாணக்கியன் அகாதெமிக்கும், சிலம்பப் பயிற்சிக்கு வீரன் இராவணா சிலம்பக் களம் அமைப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

