புகையிலை இல்லா சமுதாயம் விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், புகையிலை இல்லா சமுதாயம் விழிப்புணா்வு 3.0 திட்டத்தின் கீழ், தொடா் பிரசாரம் மற்றும் புகையிலையில்லா கல்வி நிலைய வளாகம் அறிவிக்கும் திட்டத் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றனா்.
அப்போது கல்வி நிலையங்களைச் சுற்றி 100 மீட்டா் தொலைவுக்குள் புகையிலைப் பொருட்களை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வை ஏற்படுத்த 60 நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் அறிவித்தாா்.
பொதுமக்களும், மாணவா்களும் இதுகுறித்த புகாா்களை கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 104, 1800110456 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் விமலா, மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
விராலிமலையில்... இதேபோல விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார மருத்துவ அலுவலா் மகாலெட்சுமி அறிவுறுத்தலின்பேரில் 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 21 துணை சுகாதார நிலையத்துக்கு வந்த மருத்துவ பயனாளிகள் மற்றும் பள்ளிகளில் மாணவா்களுக்கு மருத்துவத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

