ஆலங்குடி பள்ளிகளில் கட்டடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
ஆலங்குடி தொகுதியில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.98 கோடியில் 8 வகுப்பறைகளை கொண்ட கூடுதல் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துப்பேசியது: தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் மாநிலமே கல்வியால் முன்னேறி வருகிறது. பள்ளிகளில் தேவையான கட்டடங்களைக் கட்டிக்கொடுக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆலங்குடி தொகுதியில் பெரும்பாலான பள்ளிகளில் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஆகிய 2 ஒன்றியங்கள் தான் மாவட்டத்தில் அதிக ஊராட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இவ்விரு ஒன்றியங்களையும் பிரித்து கொத்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் ஏற்படுத்துவதற்கான பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல, ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.24 கோடியில் 5 வகுப்பறைக் கட்டடமும், மற்றும் வடகாடு, மாங்காடு, எல்.என்.புரம், நகரம், பனங்குளம் ஆகிய கிராமங்களில் மொத்தம் ரூ.1.88 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஆலங்குடி வட்டாட்சியா் வில்லியம் மோசஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
