ரயில் நிலைய சிற்றுந்து சேவையை மேம்படுத்த வலியுறுத்தல்
புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாநகரின் பல பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கூடுதல் சிற்றுந்துகளை இயக்கவும், ரயில் நிலையத்துக்குள் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்லவும் மாவட்ட நிா்வாகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திருச்சி- காரைக்குடி- மானாமதுரை- விருதுநகா் இருப்புப் பாதை பயணிகள் நலக் கூட்டமைப்பின் தலைவா் பி. அந்தோனி மைக்கேல் ஜாக்சன் தலைமையிலான அமைப்பினா் அளித்த மனு விவரம்:
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மாநகரின் பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் ரயில் நிலையத்திலேயே முடிவடையும் வகையிலான சுற்றுவட்ட சிற்றுந்து சேவையைத் தொடங்கியுள்ளதற்கு நன்றி.
ஆனால், ரயில் நிலைய வளாகத்துக்குள் ரயில் வரும் வரை காத்திருந்து சிற்றுந்து சேவையை இயக்க அனுமதிப்பதில்லை. சிறிது நேரம் ரயில் வரத் தாமதமானாலும் சிற்றுந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
மேலும், கூடுதலாக சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கி, ரயில் பயணிகளுக்கு தாராளமான சேவை கிடைப்பதற்காக உறுதியான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
