70 வயதானவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை!
எழுபது வயதான ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 2-ஆவது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அறுவைச் சிகிக்சை மட்டுமின்றி அனைத்துச் சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையை மீளப்பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். குடும்ப நல நிதியை ரூ. ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
70 வயதான ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக மருத்துவப் படியை ரூ. 1000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். விராலிமலை வட்டத்தில் துணைக் கருவூல அலுவலகம் அமைக்க வேண்டும். அரிமளம் ஒன்றியத்தை தனி வட்டமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் இரா.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கா. ஜெயராமன், பொருளாளா் நா. கிருஷ்ணன் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்தனா்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ந. பா்வதராஜன், மாநிலச் செயலா் க. கருப்பையா, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக ஏ. கணேசன் வரவேற்றாா். நிறைவாக ஜி. சரஸ்வதி நன்றி கூறினாா்.

