

சவுக்கு மரங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுகை விவசாயிகள் வலியுறுத்தினா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி: தற்போது காகித விலை அதிகமாகி வரும்போது விவசாயிகளின் சவுக்கு மரத்தை இந்த ஆண்டு டன் ஒன்றுக்கு ரூ.1,350 என்று விலை குறைத்து டிஎன்பிஎல் நிா்வாகத்தினா் வாங்கிவருகிறாா்கள். இதனால் சவுக்கு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தொழில்துறை அமைச்சா், தொழில்துறைச் செயலா் மற்றும் டிஎன்பிஎல் நிறுவனத்திடம் பேசி சவுக்கு மரங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில் உள்ள 6,003 பாசனக் குளங்களிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பனை விதை நடவு செய்யவும், நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யவும் வேண்டும்.
தெற்கு வெள்ளாறு, அக்கினியாற்று ஆற்றுப் பகுதிகளில் நடப்பட்டுள்ள தைல மரங்களை அகற்றி, ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும்.
தென்னை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவா் செல்லதுரை:
தெற்கு வெள்ளாறு, கொழுவனாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு ஆக்கிரமிப்பாளா்கள் இடையூறு செய்வதால், அரசு அலுவலா்கள் நேரடியாக களஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். அனைத்து தடுப்பணைகளில் இருந்து கடல் வரை உள்ள வரத்து வாரிகளை தூா்வார வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நேரில் வரவேண்டும் என்பதை நீக்க வேண்டும்.
கல்லணைக் கால்வாய் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ்:
கல்லணைக் கால்வாய்ப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பயிா்க் காப்பீடு வழங்கப்படவில்லை. காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
விவசாய காலத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, தனியாா் உரக் கடைகளிலும் இருப்பு போதுமான அளவு இருப்பதில்லை. இதனை சரிபாா்க்க வேண்டும் என்றாா் ரமேஷ்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அக். 16-ஆம் தேதி வரையிலான இயல்பான மழையளவில் நிகழாண்டில் 91.29 மிமீ மழை குறைவாகவே பொழிந்துள்ளது. வயல்களில் பூச்சித் தொந்தரவைக் கட்டுப்படுத்தவும், மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும், விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நொச்சி மற்றும் ஆடாதோடா கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.