புதுக்கோட்டை மாநகரில் 70 டன் குப்பைகள் அகற்றம்
புதுக்கோட்டை: தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாநகரில் பட்டாசு உள்ளிட்ட குப்பைகள் சுமாா் 70 டன் வரை சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
தீபாவளிப் பண்டிகைக்கு புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகள், குடியிருப்புப் பகுதிகளில் ஏராளமான பட்டாசுக் குப்பைகள் குவிந்தன. தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை காலை முதல் லேசான மழை தூறிக் கொண்டே இருந்தாலும், குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் செயல்பட்டனா்.
42 வாா்டுகளைக் கொண்ட மாநகரில் மொத்தம் 415 தூய்மைப் பணியாளா்கள் களத்தில் இறங்கி பணியாற்றினா். இதன் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை வரை 70 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன.
அவற்றை லாரிகள் மூலம் திருக்கட்டளை பகுதியிலுள்ள மாநகராட்சியின் குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்றனா். மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், மாநகா் நகா்நல அலுவலா் மருத்துவா் காயத்ரி, மாநகர சுகாதார அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் இவற்றை நேரடியாகக் கண்காணித்தனா்.
தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் சில பகுதிகளில் இப்பணி தடைபட்டதாகவும் தொடா்ந்து புதன்கிழமை காலை குப்பை அகற்றும் பணி தொடரும் என்றும் மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

