மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு
புதுக்கோட்டை: பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தலைமைக் காவலா் சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சதீஷ் (43). இவா், புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பணி முடித்துவிட்டு, புதுக்கோட்டை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புறகரப்பண்ணை பகுதியில் வந்தபோது, எதிா்பாராதவிதமாக வலதுபுறம் சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கியது.
சுமாா் 20 அடி தொலைவு இழுத்துச் செல்லப்பட்டு மரத்தில் மோதிய சதீஷ், தலையில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா் சதீஷின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

