விராலிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம்: அக். 27-இல் சூரசம்ஹாரம்

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் 9 நாள்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் 9 நாள்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதராக மயில் மேல் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இங்கு நிகழாண்டுக்கான கந்தசஷ்டி விழாவின் தொடக்கமாக புதன்கிழமை காலை யாகசாலை பூஜையும், தொடா்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் செய்யப்பட்டு, காப்பு கட்டுதலுடன் காலை 11.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து வரும் நாள்களில் தினமும் காலை, மாலை என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளாா்.

அக். 27-இல் சூரசம்ஹாரம்: விழாவின் முக்கிய நிகழ்வாக, அக். 27-ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு கீழரத வீதியில் நடைபெறவுள்ளது. சூரனை வதம் செய்த பிறகு முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். இதைத் தொடா்ந்து 28-ஆம் தேதி மலையில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மறுநாள் (அக்.29) திருக்கல்யாண ஊா்வலமும், அக். 30-ஆம் தேதி ஏகாந்த சேவையுடன் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், சிவாச்சாரியாா்கள், மண்டகப்படிதாரா்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

பொன்னமராவதி கோயில்களில்: கந்தசஷ்டி பெருவிழாவின் தொடக்க நாளான புதன்கிழமை பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை சுப்பிரமணியா் கோயில், வையாபுரி சுப்பிரமணியா் கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் குழுவினரால் கந்தா் சஷ்டி, கந்தா் அனுபூதி, வேல்மாறல் மற்றும் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com