வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் மத்திய அரசு ஊக்க நிதி: உதவி ஆணையா் தகவல்
மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சோ்க்கப்படும் பணியாளா்களுக்கும், நிறுவனத்துக்கும் மத்தியஅரசு ஊக்க நிதி வழங்குவதாக உதவி ஆணையா் வனஜா தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சாா்பில் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ் காா் யோஜனா திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி மண்டல உதவி ஆணையா் வனஜா பேசியது: தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மத்திய அரசு, பணியாளா்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக இது தற்போது அமலாக்கப்படுவதால், நிறுவனங்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
புதுக்கோட்டை சிப்காட்டிலுள்ள தொழில்நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், இப்புதிய திட்டம் குறித்த விழிப்புணா்வு கையேடும் வெளியிப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் மேலாண்மை இயக்குநா் ஏ.பி. ஜெயபால், புதுக்கோட்டை சிப்காட் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் என். ரெங்கநாதன், புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் நிறுவனங்களின் நலச் சங்கத் தலைவா் எஸ். ராஜ்குமாா், கவிஞா் தங்கம் மூா்த்தி, வருங்கால வைப்பு நிதி அலுவலக மூத்த சமூகப் பாதுகாப்பு அலுவலா் டி. மாசிலாமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

