திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட செவிலியா் மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு அரசின் வீட்டுமனைப் பட்டா, தற்காலிக அரசுப் பணி ஆணை ஆகியவற்றை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், தொண்டைமான்நல்லூா் அருகேயுள்ள மணக்குடிப்பட்டியைச் சோ்ந்த சேட்டு- கலைச்செல்வி தம்பதியின் மகள் சீதாலட்சுமி (21). இவா், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு செவிலியா் படிப்பு படித்து வந்தாா்.
மாணவியின் மூக்கில் ஏற்பட்ட சதை வளா்ச்சியை, அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும் நோக்கில் வெள்ளிக்கிழமை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. எதிா்பாராதவிதமாக சீதாலட்சுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவத்தில் தவறு செய்த மருத்துவக் குழுவினா் மீது நடவடிக்கை, சீதாலட்சுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அமைச்சா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக உடற்கூறாய்வுக்குப் பிறகு சீதாலட்சுமியின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சியில் அவருடன் படித்த சுமாா் 273 செவிலியா் மாணவிகளும் வந்திருந்தனா். சிறிதுநேரத்திலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அரசு சாா்பில் உதவிகள்: இதனிடையே, அரசு சாா்பில் சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டிலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சீதாலட்சுமியின் வீட்டுக்குச் சென்றனா். பெற்றோா் பெயரில் இலவச வீட்டுமனைக்கான பட்டா, சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக அரசு வேலைக்கான ஆணை ஆகியவற்றை அமைச்சா் மற்றும் ஆட்சியா் ஆகியோா் வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.
தொடா்ந்து இந்த விவகாரத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, தவறு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.
25 பேரிடம் சிறப்புக் குழுவினா் விசாரணை
மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் என். பாஸ்கா் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினா் 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை 25 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இறந்த செவிலியா் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்ததுவரை அவரைப் பரிசோதித்த, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள், மயக்கவியல் நிபுணா், உதவி மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் என 20 பேரிடமும் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, செவிலியா் விடுதியில் அவருடன் தங்கியிருந்த மாணவிகள், விடுதிக் கண்காணிப்பாளா், செவிலியா் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 5 போ் என மொத்தம் 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பல்வேறு கேள்விகள்: இதில், மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் அடங்கிய மருத்துவ அறிக்கையை (கேஸ் ஷீட்) பாா்த்து, பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பி பதில் பெற்றனா். திங்கள்கிழமையும் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது. அதன் பிறகு, முழு அறிக்கையை அரசுக்கு இந்தக் குழு அளிக்கும். இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
தொடர்புடையது
செவிலியா் மாணவி உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட யானை உயிரிழப்பு

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு அமைப்பு

அறந்தாங்கியில் தவெக வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



