Enable Javscript for better performance
கிராம மக்களின் போராட்டத்தால் மதுக்கடை மூடல்- Dinamani

சுடச்சுட

    

    கிராம மக்களின் போராட்டத்தால் மதுக்கடை மூடல்

    By தஞ்சாவூர்  |   Published on : 01st April 2013 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     கும்பகோணம் அருகே புதிதாக திறக்கப்பட இருந்த அரசு  மதுபானக் கடைக்கு எதிராக 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியதால் அந்த மதுக்கடை மூடப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. இதையொட்டி விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவலஞ்சுழி அருகே உள்ள அரசு மதுக்கடையை இடம்மாற்றி, சுவாமிமலை- நாககுடி இடையே உள்ள முதன்மைச் சாலையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி நாககுடி சாலையில் திங்கள்கிழமை (ஏப்.1) புதிய மதுக் கடையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இதற்காக சனிக்கிழமை புதிய கடையில் மது பாட்டில்களைக் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டன. தொடர்ந்து விளம்பர பலகையும் பொருத்தப்பட்டது.

    தகவலறிந்த நாககுடி, மருத்துவகுடி, ஆதனூர், நரசிம்மபுரம், ஓலப்பாடி, எருமைப்பட்டி, புள்ளபூதங்குடி, இன்னம்பூர், கல்விக்குடி, திருவைக்காவூர் ஆகிய பத்துக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் மதுக் கடையைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை காலை அந்தக் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் கையில் செருப்புகள், விளக்குமாறுகளுடன் சுவாமிமலை - திருவைக்காவூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கும்பகோணத்திலிருந்து திருவைக்காவூர் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மறிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த போலீஸார், வட்டாட்சியர் மாதவன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையைத் திறக்க விட மாட்டோம் எனவும், மது பெட்டிகளை எடுத்துச் சென்றால்தான் கலைந்து செல்வோம் எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மதுக் கடையின் விளம்பர பலகை அகற்றப்பட்டது.

    பின்னர், மது பாட்டில்களும் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai