விரைவு ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி
By பாபநாசம் | Published on : 01st April 2013 05:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாபநாசம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் விரைவு ரயில் ஞாயிற்றுகிழமை நிற்காமல் சென்றதால் அதில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சென்னை - திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் ஜன.15 முதல் நின்று செல்கிறது.
ஞாயிற்றுகிழமை அதிகாலை சுமார் 15 பயணிகள் சென்னை செல்ல பாபநாசம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அதிகாலை 4.37 மணியளவில் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு வந்த திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில், பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதனால், இந்த ரயிலில் செல்லக் காத்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பாபநாசத்தில் இறங்க வேண்டிய பயணிகள் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.
இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன், ரயில்வே அலுவலரிடம் புகார் கூறினார்.
அப்போது, இதுகுறித்து விசாரணை நடத்தி ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில் பாதுகாப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், சென்னை செல்லக் காத்திருந்த பயணிகள் வேறு ஒரு ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.