Enable Javscript for better performance
மனை வாங்குபவர்கள் லே-அவுட் அங்கீகாரத்தை சரிபார்க்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மனை வாங்குபவர்கள் லே-அவுட் அங்கீகாரத்தை சரிபார்க்க வேண்டும்

    By தஞ்சாவூர்,  |   Published on : 03rd April 2013 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     ஊராட்சிகளில் மனை வாங்குபவர்கள் லே-அவுட் அங்கீகாரம் பெற்றதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பது:

    தஞ்சை மாவட்டத்தில் சில கிராம ஊராட்சிகளில் லே-அவுட்டுகளுக்கான அங்கீகாரம் விதிமுறைகளை மீறிய வகையில் வழங்கப்பட்டுள்ளது அலுவலர்களின் ஆய்வின் போது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்களும் வருகின்றன.

    லே-அவுட்டுகள் எவ்வளவு குறைவான பரப்பளவு உடையதாக இருந்தாலும், ஊராட்சித் தலைவரால் தன்னிச்சையாக அவற்றிற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

    லே-அவுட்களுக்கு நகர் ஊரமைப்புத் துறையால் மட்டுமே தொழில்நுட்ப அனுமதி வழங்க முடியும். அதன் பிறகே ஊராட்சி மன்றத்தால் அனுமதி வழங்க இயலும்.

    நகர் ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறப்படாமல் ஊராட்சி தலைவருடைய ஒப்புதல் மட்டும் பெறப்பட்டிருந்தால் அவை அரசு விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டாக கருதப்படும்.

    அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளுக்கு ஊராட்சியால் குடிநீர், சாலை வசதி, மின் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாது. எனவே, பொதுமக்கள் கிராமப் பகுதிகளில் உள்ள மனைகளை வாங்குவதற்கு முன்பு அந்த லே-அவுட்டுகளுக்கு நகர் ஊரமைப்புத் துறையின் முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், அதன் அனுமதி எண் போன்ற விவரங்களையும் சரிபார்த்த பிறகே பத்திர பதிவு செய்ய வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களில் 2,000 சதுர அடி வரை கட்டப்படும் வணிக நோக்கங்களுக்கான கட்டடங்கள் மற்றும் 4,000 சதுர அடி வரையில் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டட வரைபட அனுமதி மட்டுமே ஊராட்சி மன்றத்தால் வழங்கப்பட வேண்டும். அதற்கு மேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத் துறையினரிடம் மட்டுமே கட்டட வரைபட அனுமதி பெறப்பட வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட லே-அவுட்டுக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா அல்லது அனுமதி வழங்கப்படாமல் ஊராட்சித் தலைவரால் தன்னிச்சையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை சரிபார்த்துக் கொள்ள மருத்துவக் கல்லூரி சாலையில் ராஜப்பா நகர் 4-ம் தெருவில் உள்ள நகர் ஊரமைப்புத் துறையின் துணை இயக்குநரை 04362 - 273575 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai