Enable Javscript for better performance
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 8,700 பேருக்கு அறுவைச் சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 8,700 பேருக்கு அறுவைச் சிகிச்சை

    By தஞ்சாவூர்,  |   Published on : 03rd April 2013 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை சுமார் 8,700 பேருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

    தஞ்சையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில் அவர் மேலும் பேசியது:

    தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவ சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளை அரசின் செலவிலேயே ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரையும், தேவை ஏற்பட்டால் ஒரு குடும்பத்துக்கு ரூ. 1.50 லட்சம் வரை 4 ஆண்டுகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்.

    இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 4.74 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 24 தனியார் மருத்துவமனைகளும், 4 அரசு மருத்துவமனைகளும் என மொத்தம் 28 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 8,728 பேருக்கு ரூ. 16.69 கோடியில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 4,350 பேருக்கு ரூ. 8.87 கோடியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் பாஸ்கரன்.

    தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் கே. மகாதேவன், நலப் பணிகள் இணை இயக்குநர் மீனாட்சி, குடும்ப நலத் துறை துணை இயக்குநர் சந்திரசேகரன். இந்திய குழந்தைகள் நலச் சங்க மாநிலத் தலைவர் எம். சிங்காரவேல், குருதி வங்கி மருத்துவ அலுவலர் ராதிகா மைக்கேல் உள்ளிட்டோர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai