Enable Javscript for better performance
இணையவழித் தமிழ்த் தகவல் திட்டப் பணி 90 சதவீதம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இணையவழித் தமிழ்த் தகவல் திட்டப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார் துணைவேந்தர் ம. திருமலை.

    இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் பள்ளி சார்பில் புதன்கிழமை காலை நடைபெற்ற செந்தமிழ்க் காவலர் அ. சிதம்பரநாதன் செட்டியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:

    இணையவழித் தமிழ்த் தகவல் திட்டத்துக்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு ரூ. 12 லட்சம் நிதி நல்கை வழங்கியது. கடந்த மாதம் முதல் பேராசிரியர்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் திட்டத்தில் இணையத்தில் 1,000 பக்கங்களுக்கு தகவல்கள் பெற்று பதிவேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இதுவரை 800 பக்கங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 200 பக்கங்களுக்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியும் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இதற்காக பல தரம் வாய்ந்த கட்டுரைகளை ஆசிரியர்கள் வழங்கியிருப்பது என்பது பாராட்டத்தக்கது. பேராசிரியர்களின் கண்டுபிடிப்புகள் மக்களிடம் கொண்டு செல்வதற்கு இந்தத் திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, அவர்களும் ஆர்வமுடன் எழுதி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் திருமலை. பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் இராம. குருநாதன் சிறப்புரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப் புல முதன்மையர் வ. குருநாதன், இந்திய மொழிகள் பள்ளித் தலைவர் இரா. முரளிதரன், அறக்கட்டளை நிறுவனர் அ. சபாபதி உள்ளிட்டோர்

    கலந்து கொண்டனர்.

    மோடி ஆவணத்துக்கு ரூ. 14 லட்சம்: பின்னர், மாலையில் கல்வெட்டியல், தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு, பாராட்டு விழாவில் துணைவேந்தர் திருமலை பேசியது:

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 52,000 மோடி ஆவணங்கள் (மராட்டிய அரசவைக்கான காகித ஆவணங்கள்) உள்ளன. அவற்றை கணினிமயமாக்க மகாராஷ்டிர அரசு ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காவல் துறையில் உள்ள காவல் நண்பர்கள் திட்டம் போல பண்பாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. கல்வெட்டு பற்றிய தகவல்கள் அறிவதற்காக இந்தப் பண்பாட்டு நண்பர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். இதற்காக அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai