Enable Javscript for better performance
\\\"பெண்களுக்கு அதிகாரமளித்தால் பாலியல் கொடுமைகள் குறையும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பெண்களுக்கு அதிகாரமளித்தால் பாலியல் கொடுமைகள் குறையும்'

    By தஞ்சாவூர்,  |   Published on : 05th April 2013 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிலையை ஏற்படுத்தினால் பாலியல் கொடுமைகளைக் குறைக்க முடியும் என்றார் அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகக் குற்றவியல் நீதி மற்றும் குற்றவியல் ஆய்வுத் துறைப் பேராசிரியர் விவியன் பி. லார்டு.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மண்டல மகளிரியல் கூட்டமைப்பு, பெரியார் மகளிர் மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சி அமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "மாறி வரும் சமுதாய கலாசார மாற்றங்களால் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை எதிர்நோக்குதல்' குறித்த இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

    இந்தியா ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயமாகக் கருதப்படுகிறது. இதனால், பெண்கள் மீதான வன்முறை அதிகமாக இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையைத் தடுப்பது எளிதான விஷயம் இல்லை. என்றாலும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிலையை ஏற்படுத்தினால் இப்பிரச்னையை குறைக்கலாம்.

    ஆண்கள் - பெண்கள், சிறுவர்கள் - சிறுமிகள் அனைவரும் உரிமைகள், வளங்கள், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை சமமாக அனுபவிப்பதைத்தான் பாலின சமத்துவம் என யூனிசெப் நிறுவனம் விவரிக்கிறது. இந்தியாவில் பாலின சமத்துவத்துக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

    சமூகத்தில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பெறுவதையே பாலின அதிகாரம் எனக் கூறப்படுகிறது. அரசியல், வணிகம், கல்வி, சமூகத் துறைகளில் தலைமை ஏற்கும்போதுதான் இந்த அதிகாரம் கிடைக்கும்.

    பொருளாதாரம், அரசியலில் பெண்கள் முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பெற்றால்தான் பாலின அதிகாரமளித்தலுக்கான அளவீடு என ஐ.நா. சபை குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில் இந்தியா 128 ஆவது நாடாக இருக்கிறது.

     இந்தியாவில் இடைநிலை மேலாண்மை நிலையிலேயே 48 சதப் பெண்கள் விடுவிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து நிர்வாக நிலைகளிலும் பெண்கள் உயர் நிலையில் 5.8 சதமும், கீழ் நிலையில் 3 சதமும் காணப்படுகின்றனர். நூறு ஆண்களுக்கு 2 பெண்கள் வீதமே நிர்வாக மற்றும் மேலாண்மை நிலைகளில் பெண்கள் இருக்கின்றனர்.

    பாலின அதிகாரமளித்தல் அதிகரித்தால் பாலின கொடுமைகள் குறையும். மேலும், ஆணாதிக்கத் தன்மை குறைந்து பரஸ்பர மரியாதை அதிகரிக்கும் என்றார் விவியன் பி. லார்டு.

    பல்கலைக்கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி பேசியது:

    பாலின சமநிலை ஏற்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் செல்கிறோம். அரசியலில் பெண்கள் சமநிலையை எட்டவில்லை. அவ்வாறு இருந்தாலும், பல பெண்களுடைய கணவர்தான் அதிகாரத்தில் இருக்கிறார்.

    ஆணாதிக்கம் நிறைந்திருக்கும் வரை இந்தச் சமூகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்படாது.

     சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அந்த அடிப்படையில் இந்த மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் வீரமணி.

    பல்கலைக்கழக இணை வேந்தர் வீ.கே.யென். கண்ணப்பன், இணைத் துணைவேந்தர் எம். தவமணி, யூனிசெப் நிறுவனத்தின் கிராமப்புற மேம்பாட்டு ஆலோசகர் பி. ரெஜினா பாப்பா, அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் யசோதா சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் வரவேற்றார். கூட்டமைப்பின் செயலர் என். மணிமேகலை நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai