Enable Javscript for better performance
அடிப்படை வசதிகள் இல்லாததால் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகள் இல்லாததால் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 06th April 2013 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூரில் பிளஸ்- 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை வெள்ளிக்கிழமை புறக்கணித்தனர்.

    தஞ்சாவூர் மகர்நோன்புசாவடியில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், பிற மாவட்டங்களிலிருந்து வந்த விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் சுமார் 600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மையத்தில் ஏற்கனவே நெருக்கடியான இடத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இயற்பியல், வேதியியல் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மேலும் சுமார் 250 ஆசிரியர்கள் மையத்துக்கு வந்தனர். இதனால், கடும் இட நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், விடைத்தாள் திருத்துவதற்கான உழைப்பூதிய நிலுவையை உடனே வழங்க வலியுறுத்தியும் பள்ளி நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை காலை ஆசிரியர்கள் வாயில் கூட்டம் நடத்தினர்.

    பின்னர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலர் சு. மதியை சந்திக்கச் சென்றனர்.

    அப்போது, ஆசிரியர்களுக்கும், அங்கிருந்த அலுவலருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, அலுவலர் தரக் குறைவாக பேசியதால் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    ""வழக்கமாக பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 2 மையங்களில் நடைபெறும். ஆனால், நிகழாண்டு ஒரே மையத்தில் மட்டும் நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் ஒரு டெஸ்க் - பெஞ்சில் 4 ஆசிரியர்கள் அமர்ந்து திருத்த வேண்டிய நிலை நிலவுகிறது. அப்படியும் இடம் போதாததால் வரண்டாவிலும் ஆசிரியர்கள் அமர்ந்து திருத்துகின்றனர்.

    விடைத்தாள் திருத்துதலில் சிறு பிழை ஏற்பட்டால் ஆசிரியர்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இவ்வளவு நெருக்கடிக்கு இடையே திருத்தும் போது பிழை நேரிட்டால் ஆசிரியர்கள்தான் பாதிக்கப்படுவர் என்பதையும் அலுவலர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

    பெண்கள் பள்ளி என்பதால் ஆண்களுக்கு தனி கழிப்பறை இல்லை.  புகார் தெரிவிக்கப்பட்ட பிறகு கழிப்பறையில் இடையே திரை மட்டும் கட்டப்பட்டுள்ளது. எனவே, கழிப்பறைக்குச் செல்வதற்கு ஆசிரிய, ஆசிரியைகள் இடையே தயக்கம் நிலவுவதுடன், பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்றனர்'' ஆசிரியர்கள்

    இதனால், விடைத்தாள் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையே, பிற்பகலில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதன்மைக் கல்வி அலுவலர் இயற்பியல், வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி வேறொரு பள்ளியில் மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

    தவிர, வாய் தகராறின் போது ஆசிரியர்கள் தரக் குறைவாகப் பேசியதாக அதிருப்தி தெரிவித்த அலுவலகப் பணியாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai