Enable Javscript for better performance
தஞ்சை - சென்னை விரைவு ரயில் சேவை விரைவில் தொடங்கும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை - சென்னை விரைவு ரயில் சேவை விரைவில் தொடங்கும்'

    By தஞ்சாவூர்  |   Published on : 07th April 2013 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தஞ்சை - சென்னை விரைவு ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றார் தஞ்சை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.

    தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தஞ்சை - சென்னை விரைவு ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். இதுதொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசியுள்ளேன். தஞ்சை பகுதி மக்கள் கேட்கும் நேரத்தில் இந்த ரயில் சேவையை விரைவில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

    தஞ்சை நகரின் பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த ரயில் நிலையத்தில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் பழநிமாணிக்கம்.

    இரட்டை ரயில் பாதை: அப்போது உடனிருந்த தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அலுவலர் (கட்டுமானம்) எஸ். விஜயகுமாரன் தெரிவித்தது:

    விருத்தாசலம் - திருச்சி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, தஞ்சாவூர் - பொன்மலை இடையே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 350 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில் இப்போது ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலமும், நிதியும் கிடைத்தால் இரண்டரை ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை முடித்துவிடலாம். தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு அளவீடு மேற்கொள்ளும் பணி ஜூன் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இதில், தொழில்நுட்ப முகமையைச் சார்ந்த அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்வர். இயன்றவரை வீடு, நிலம் பாதிக்கப்படாத வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் தென்னமநாடு, ஒரத்தநாட்டில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. நிதி விரைவாக கிடைத்தால், இந்தத் திட்டத்தை மூன்று ஆண்டுகளில் முடித்து விடலாம்.

    தஞ்சை ரயில் நிலையத்தில் முதல், இரண்டாம் நடைமேடைகள் அமைக்கும் பணி, சுரங்க நடைபாதை, நடைமேம்பாலம் ஆகியவை ரூ. 7 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் நடைமேடை ஏப். 10-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். முதல் நடைமேடை அமைக்கும் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    தவிர, இந்த ரயில் நிலையத்தில் மேலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ. 4 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி வந்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றார் விஜயகுமாரன். அப்போது, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai