Enable Javscript for better performance
10 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராத புதை சாக்கடைத் திட்டப் பணி-- Dinamani

சுடச்சுட

    

    10 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வராத புதை சாக்கடைத் திட்டப் பணி-

    By தஞ்சாவூர்,  |   Published on : 08th April 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணி தொடங்கப்பட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    இந்தத் திட்டம் மத்திய, மாநில அரசு நிதி, உள்ளூர் திட்டக் குழும நிதி, பொதுமக்கள் பங்களிப்பு என மொத்தம் ரூ. 70 கோடி மதிப்பில் 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஏறத்தாழ 10 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் திட்டப் பணி நிறைவடையவில்லை.

    இதனிடையே, இந்தத் திட்டத்தில் 30,000 இணைப்புகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை வைப்புத் தொகை பெறப்பட்டு, சுமார் 12,500 இணைப்புகள் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    ஆனால், பணிகள் நிறைவடையாததால் இத்திட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. குறிப்பாக, புதை சாக்கடைத் திட்டக் குழாயில் அடைப்புகள் ஏற்படுவதால், ஆள் நுழைவு குழாய்கள் வழியாகத் தண்ணீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மழைக்காலத்தில் சில சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆள் நுழைவு குழாய்களிலிருந்து கழிவு நீர் வழிந்து செல்லும். பல வீடுகளில் கழிவு நீர் புதை சாக்கடைக்குள் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே தேங்கி நிற்கிறது.

    இதனால், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பல்வேறு இன்னல்களைச் சந்தித்த நகர மக்கள் வைப்புத் தொகை செலுத்தி இணைப்புகளைப் பெற்ற பிறகும் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

    எனவே, நகர் மன்றத்தில் அண்மைக் காலமாக ஒவ்வொரு கூட்டத்திலும் புதை சாக்கடை திட்ட பிரச்னைகள் தொடர்பான விவாதம் வலுவடைகின்றன. ஆனால், பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டால்தான் பொறுப்பை ஏற்க முடியும் என்பதில் நகராட்சி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

    இந்நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர், குடிநீர் வடிகால் வாரிய உயர் அலுவலர்கள் முன்னிலையில்  இத்திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதில், மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும் எனக் குடிநீர் வடிகால் வாரியம் உறுதியளித்தது. ஆனால், மார்ச் மாதம் கடந்தும் இன்னும் பணிகள் முடிவடையவில்லை. எப்போது ஒப்படைக்கப்படும் என இதுவரை குடிநீர், வடிகால் வாரியத்திடமிருந்து தகவல் இல்லை என்றும், என்றாலும் பராமரிப்புப் பணிக்கு மட்டும் அண்மையில் ஆள்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து குடிநீர், வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தது:

    நகரில் மொத்தம் 259 கி.மீ. தொலைவுக்குக் குழாய்கள் பதிக்கத் திட்டமிடப்பட்டு, அதில் 99 சதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏறத்தாழ ஒரு கி.மீ. தொலைவுக்குக் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக ரூ. 3 கோடிக்கு மேல் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். அந்த நிதி வராததால் தொடர்ந்து பணிகள் மேற்கொள்வதில் சிரமம் நிலவுகிறது.

    மேலும், வாரியம் கொடுத்த இணைப்புகளில் எந்தவித பிரச்னையும் இல்லை. அதன் பிறகு நகராட்சிப் பணியாளர்கள் அளித்த இணைப்புகள் முறையாகச் செய்யப்படவில்லை. வீட்டு இணைப்பிலிருந்து குழாய்க்குச் செல்லும் பாதையில் அமைக்கப்பட வேண்டிய வடிகட்டி சாதனமும் பொருத்தப்படவில்லை. இதனால், வீடுகளிலிருந்து வரும் கழிவு நீருடன் குப்பைகளும் சேர்ந்து வருகின்றன. இவையே குழாயில் அடைப்பு ஏற்படுவதற்குக் காரணம். இதை நகராட்சி நிர்வாகம்தான் சீர் செய்ய வேண்டும் என்றனர்.

    இரு நிர்வாகங்களுக்கு இடையே நிலவும் குழப்பங்கள் காரணமாக குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடினாலும், வீட்டுக்குள் தேங்கினாலும் அவற்றை சீரமைப்பதற்கு ஆள்கள் வருவதில்லை என்ற புகார்கள் நிலவுகின்றன. ஆனால், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால், நகர மக்கள்தான் பெரும் வேதனையை அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai