Enable Javscript for better performance
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?

    By தஞ்சாவூர்,  |   Published on : 09th April 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை சோதனையில் மகசூல் இழப்பு பெரிய அளவில் இல்லை எனக் காட்டப்பட்டுள்ளதால், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மாவட்டத்தில் நிகழாண்டு ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டாலும், காவிரி நீர் வரத்து, பருவ மழைப் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்பட்டது.

    இந்தப் பாதிப்பிலிருந்து விவசாயிகளைக் காப்பதற்காகத் தமிழக அரசு அனைத்து விவசாயிகளையும் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்தது. மேலும், கடன் பெறா விவசாயிகளுக்கான பிரிமியத்தையும் அரசே செலுத்தியது.

    கடன் பெற்ற விவசாயிகளுக்கு வழக்கம்போல சம்பந்தப்பட்ட வங்கியிலேயே பிரிமியம் பிடித்தம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் மொத்தத்தில் 1.66 லட்சம் விவசாயிகள் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், 50 சதத்துக்கும் அதிகமான பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ. 15,000 வீதம் வறட்சி நிவாரணத் தொகையை வழங்கியது. மாவட்டத்தில் இந்த நிவாரணத் தொகை 12,249 ஏக்கருக்கு மட்டும் கிடைத்தது. 

    எனவே, மாவட்டத்தில் 50 சதத்துக்கும் அதிகமாக மகசூல் இழப்பைச் சந்தித்த விவசாயிகள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், 11,372 பேருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டது என விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதனிடையே, காப்பீட்டு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு முன் மகசூல் இழப்பை மதிப்பீடு செய்வதற்காகப் புள்ளியியல் துறையும், வேளாண்மைத் துறையும் இணைந்து பயிர் அறுவடை சோதனையை மேற்கொண்டன.

    மாவட்டத்தில் 51 வருவாய் சரகங்களில் (பிர்கா) உள்ள 403 இடங்களில் இந்தப் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில், மாவட்ட அளவில் அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 7,200 கிலோவும், குறைந்தப்பட்சமாக மகசூல் 0 கிலோ எனவும் மதிப்பிடப்பட்டது. என்றாலும், மாவட்ட அளவில் சராசரி மகசூலாக 4,152 கிலோ என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில், குறைந்தபட்சமாக ஹெக்டேருக்கு தஞ்சாவூர் ஒன்றியம் பெரம்பூரில் 60 கிலோவும், திருவையாறில் 680 கிலோவும் பதிவாகியுள்ளது. தவிர, மதுக்கூர் ஒன்றியம் பெரியகோட்டை, துவரங்குறிச்சி, பேராவூரணி ஒன்றியம் குறிச்சி, அம்மாபேட்டை ஒன்றியம் மெலட்டூர் ஆகிய இடங்களில் பூஜ்யம் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சரகங்களில் சராசரி அளவைப் பார்க்கும்போது ஹெக்டேருக்கு 2,500 கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது.

    எனவே, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது என வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்தது:

    வருவாய் சரக அளவில் சராசரி மகசூல் 2,000 கிலோ அல்லது அதற்கும் குறைவாக இழப்பு இருந்தால்தான் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் எனத் தெரிகிறது.

    ஆனால், பயிர் அறுவடை சோதனையில் மகசூல் அளவு அதிகமாகப் பதிவாகியுள்ளதால், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றனர்.

    எனவே, வறட்சி நிவாரணம் கிடைக்காத நிலையில், பயிர் காப்பீட்டுத் தொகையாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

    பயிர் அறுவடை சோதனை வருவாய் சரக அளவில் சராசரியாக சுமார் 10 இடங்களில் ரேண்டம் அடிப்படையில் வயல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட வயல்கள் விடுபடுகின்றன. எனவே, சரக அளவில் என்பதற்குப் பதிலாக கிராம அளவில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai