Enable Javscript for better performance
கோடை பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேர மும்முனை மின்சாரம் தேவை- Dinamani

சுடச்சுட

    

    கோடை பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேர மும்முனை மின்சாரம் தேவை

    By தஞ்சாவூர்  |   Published on : 10th April 2013 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றார் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எம்.ஆர். சிவசாமி. தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

    கடந்த காலங்களில் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு இருந்தாலும் நெல் சாகுபடி நீடிக்க காவிரி டெல்டாவில் 20 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட்டது. சம்பா பயிரை காப்பாற்ற 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.

    வழக்கம்போல் காவிரி டெல்டா மாவட்டங்களில் மின் விநியோகம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது கடுமையான மின்வெட்டு நிலவுவால் 3 மணிநேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை.

    இதனால், காவிரி டெல்டாவில் கோடை நெல் சாகுபடி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ததில் காவிரி நீர் வராததால், நெல் பயிர் கருகியதற்கு சுமார் 12 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் தஞ்சை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    பயிர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காததால் தஞ்சை உள்பட அனைத்து டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    காவிரியில் தண்ணீர் வராததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மிகவும் குறைந்து அணை வற்றிடும் அபாயத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு வரும் நதிகளுக்கு இடையே தடுப்பணை கட்டி தண்ணீர் விடாமல் தடுக்கின்றனர். தென்பெண்ணை ஆற்றில் ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீரை உறிஞ்சி கர்நாடகாவில் குளம், குட்டையில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி காவிரிக்கு தண்ணீர் விடவும், மற்ற நதிகளில் தடுப்பணை கட்டி தண்ணீர் திருடுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அண்டை மாநிலங்கள் தண்ணீர் தனக்குதான் சொந்தம் என்று செயல்படுவதை தடுக்க நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 12-ம் தேதி தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம் மாலை 4 மணிக்கு பெசண்ட் அரங்கில் நடைபெற உள்ளது என்றார் சிவசாமி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai