Enable Javscript for better performance
ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

  

  ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற்றம்

  By 'தஞ்சாவூர்  |   Published on : 12th April 2013 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறி வருகிறது என்றார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு - மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அவினாஷ் சந்தர்.

  தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக நாள் விழாவில் அவர் மேலும் பேசியது:

  நம் நாட்டில் 1972-ல் இருந்து ஏவுகணை தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் துறையில் 1983-ல் புதிய தொலைநோக்குத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

  தொடக்கத்தில் ஏ.இ., அக்னி 1 ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு அக்னி 2, அக்னி 3, அக்னி 4 போன்றவை உருவாக்கப்பட்டன. கடைசியாக தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் தயாரிப்பு சவாலானது.

  தொடக்கக்கால ஏவுகணை 100 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் விதமாக இருந்தது. அக்னி 5 ஏவுகணையில் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கும் விதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எந்த இடத்தையும் 15 நிமிஷங்களில் சென்றடையக் கூடியது. அக்னி 5 ஏவுகணையின் வேகம் ஒலியின் வேகத்தை விட 25 மடங்கு கூடுதலானது. இந்த இலக்கும் குறி தவறாமல் நூறு சதம் சரியாகச் சென்றடையும்.

  இந்த ஏவுகணைக்கான தொழில்நுட்பம் முழுவதும் இந்தியர்களுடையது. மேலும், 80 சத பாகங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை.

  இதேபோல அக்னி 5 ஏவுகணையில் எடை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

  குறிப்பாக, ஏவுகணை போக்கைக் கட்டுப்படுத்தும் கணினி சாதனத்தின் எடையும் 20 கிலோவிலிருந்து 500 கிராமாகக் குறைக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஒரேயொரு சிப் மூலம் இயக்கும் விதத்தில் வடிவமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

  இந்தத் துறையில் இணைய இளம் விஞ்ஞானிகள் அதிகளவில் முன்வர வேண்டும். ஆனால், விண்வெளித் துறையில் திறன் மிக்க பொறியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இதை சாஸ்த்ரா போன்ற கல்வி நிறுவனங்கள் சவாலாக எடுத்துக் கொண்டு திறன் மிக்க பொறியாளர்களை உருவாக்க வேண்டும்.

  தொழில்நுட்பம், புத்தாக்கச் சிந்தனை, புதிய கண்டுபிடிப்புகளைச் செயல்படுத்துதல், ஈடுபாடு ஆகியவற்றை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

  புத்தாக்கச் சிந்தனை தொடர்பாக மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்டு, கருத்துகளைப் பெற்று செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்றார் அவினாஷ் சந்தர்.

  பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

  கல்வி உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஆர். தீபா ராஜகோபாலுக்கு காமகோடி விருது வழங்கப்பட்டது. மேலும், முனைவர்கள் ஜான் போஸ்கோ பாலகுரு, கே. உமா மகேஸ்வரி, கே.எஸ். ராஜன் ஆகியோருக்கு சஃபையர் விருதுகளும் வழங்கப்பட்டன.

  வெற்றிகரமாக முனைவர் பட்டம் முடித்த ஏழு ஆசிரியர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும், 2012 - 13 ஆம் ஆண்டில் 5-க்கும் அதிகமான இதழ்களில் கட்டுரைகள் வெளியிட்ட 40 ஆசிரியர்களுக்கு ரூ. 5.10 லட்சம் மதிப்பிலான பரிசுகளும், சிறந்த மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

  பதிவாளர் ஜி. பாலச்சந்திரன், முதன்மையர்கள் எஸ். வைத்திய சுப்பிரமணியன், எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai