Enable Javscript for better performance
மீத்தேன் திட்டத்துக்கு எதிராக விரைவில் கிராமக் குழுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மீத்தேன் திட்டத்துக்கு எதிராக விரைவில் கிராமக் குழுக்கள்

    By தஞ்சாவூர்  |   Published on : 12th April 2013 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரிப் படுகையில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்காகக் கிராமங்கள் அளவில் குழுக்கள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் காவிரி சமவெளி பாதுகாப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் என். குணசேகரன்.

    தஞ்சாவூரில் வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவித்தது:

    தமிழ்நாடு - புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்கு தெற்குப் பகுதி வரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் ஆகிய வட்டங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய வட்டங்களிலும் 24 சதுர கி.மீ. பரப்பளவில் பழுப்பு நிலக்கரியும், எஞ்சிய 667 சதுர கி.மீ. பரப்பளவில் மீத்தேன் வாயுவும் என மொத்தம் 691 சதுர கிலோமீட்டரில் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதல் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு. ஆனால், அதை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும், மீத்தேன் மாசுபாடு அற்ற தூய்மையான எரிபொருள் என்றும், இது பசுமைத் திட்டம் எனவும் தனியார் நிறுவனம் விளம்பரம் செய்கிறது.

    ஆனால், நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டுபோகும். மேலும், அருகிலுள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும். இதனால், காவிரிப் படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றவையும் நிகழக்கூடிய அபாயம் உண்டு.

    ஆபத்தான, நாசத்தை விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்தால் பேரிடர், பேரழிப்புக்கு தமிழகத்தை உள்ளாக்கும். மேலும், காவிரிப்படுகையைப் பாலைவனமாக மாற்றிவிடும். எனவே, இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இயக்கங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள கிராமங்களில் மீத்தேன் வாயுவுக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்படவுள்ளன.

    இந்தக் குழுக்கள் மூலம் இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள், அழிவுகள், வாழ்வாதாரப் பாதிப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன என்றார் குணசேகரன்.

    தாளாண்மை உழவர் இயக்கம் கோ. திருநாவுக்கரசு, கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் மக்கள் விடுதலை இயக்கம் இரா. அருணாசலம், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் துரை. மதிவாணன், தமிழ்நாடு மக்கள் கட்சி சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai