Enable Javscript for better performance
கர்நாடகத்தில் கோடை பாசனத்துக்கு தண்ணீர் விடுவதைத் தடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் கோடை பாசனத்துக்கு தண்ணீர் விடுவதைத் தடுக்க வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்,  |   Published on : 13th April 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக அணைகளில் கோடை பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் நல்லசாமி.

    இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

    கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை அந்த மாநிலத்தில் கோடைகாலப் பாசனத்துக்குத் திறக்கப்படுகிறது. இதனால், ஜூன் மாதம் பருவ மழை தொடங்கும் போது கர்நாடக நீர்த் தேக்கங்களில் போதிய தண்ணீர் இருப்பதில்லை. மேலும், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் கொடுக்க முடிவதில்லை. எனவே, கர்நாடகத்தில் கோடை பாசனத்துக்குத் தண்ணீர் விடுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி வடிநிலங்களில் இருந்து வரும் எந்த ஒரு அணையில் இருந்தும் கோடையில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாட்டில் காவிரி வடிநிலத்தில் உள்ள கீழ்பவானி அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு கோடைகாலத்தில் ஏப். 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் அரசு அறிவித்தபடி ஏக்கருக்கு ரூ. 15,000 நிவாரணம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு நிறுவன குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மேலும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. எனவே, வெளிநாட்டு நிறுவன குளிர் பானங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இதற்கு பதிலாக இளநீர் விற்பனையை அறிமுகம் செய்ய வேண்டும்.

    கள்ளுக்கான தடை காரணமாக பனை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இளநீரை அறிமுகம் செய்தால் தென்னை மரத்தை அழிவில் இருந்து காக்கலாம் என்றார் நல்லசாமி.

    அப்போது, தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கத் தலைவர் தவமணிதாஸ், கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கச் செயலர்கள் கோபிநாத், தங்கராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai