"தானம் செய்வோரை வாழ்த்துவது நம் கடமை'
By தஞ்சாவூர், | Published on : 13th April 2013 05:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தானம் செய்பவர்களை வாழ்த்திப் பேசுவது நம் கடமை என்றார் திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான கி. வீரமணி.
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கட்டடங்களுக்கான பெயர் சூட்டும் விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
அதிக விளம்பரங்களை நாடும் இன்றைய காலக்கட்டத்தில் தானம் செய்வதைப் பிறர் அறியாது வழங்கும் பெருந்தகையினைரை வாழ்த்திப் பேசுவது நம்முடைய கடமை.
பெரியாரிடம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் அத்துடன் தன்னகத்தே உள்ள அனைத்துப் பொருள்களையும் மக்களுக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதற்காக 1952 ஆம் ஆண்டில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. பின்னர், பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளையை உருவாக்கினர். பெரியார் சுயமரியாதை பிரசார அறக்கட்டளை ஓர் அறக்கட்டளையே அல்ல என வரிக்கு மேல் வரி மற்றும் அபராத வரி போன்றவை விதிக்கப்பட்டது. மேலும், அறக்கட்டளையே செயல்படாத அளவுக்குப் பல்வேறு சோதனைகளைச் சந்திக்க நேருகிறது.
இவற்றைப் போராடி வெற்றி கண்டு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என்பதையும், அடுத்த பத்தாண்டுகளுக்கு அறக்கட்டளைக்கான அங்கீகாரத்தையும் தீர்ப்பாயம் அளித்தது. இந்த அறக்கட்டளை உருவாவதற்கு பெரிதும் உதவியவர் வரியியல் வல்லுநர் ராஜரெத்தினம்தான் என்றார் கி. வீரமணி.
மேலும், பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பக கட்டடத்துக்கு ஜமுனா ராஜரெத்தினக் கூடம் என்ற பெயரை சென்னை பட்டயக் கணக்காயர் ஜி. நாராயணசாமியும், கல்வியியல் துறை கட்டடத்துக்கு பிரசாந்த், ஜோதி, ராஜி பத்மாவதி கூடம் என்ற பெயரை வீரமணியும் சூட்டினர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனித வளப் பிரிவு முதன்மை மேலாளர் கி. இளங்கோவன், திராவிடர் கழகப் பொதுச் செயலர் துரை. சந்திரசேகரன் வாழ்த்துரையாற்றினர்.
இணைவேந்தர் வீகேயென். கண்ணப்பன், துணைவேந்தர் நல். ராமச்சந்திரன், பல்கலைக்கழக இணைத் துணைவேந்தர் எம். தவமணி, பதிவாளர் மு. அய்யாவு, மோகனா வீரமணி, திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ப. சுப்பிரமணியன், பவர் அமைப்பின் இயக்குநர் உ. பர்வீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.