Enable Javscript for better performance
தமிழ்ப் பல்கலை. பதிப்புத் துறைக்குத் தனி இணையதளம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலை. பதிப்புத் துறைக்குத் தனி இணையதளம்

    By  தஞ்சாவூர்  |   Published on : 15th April 2013 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறைக்குத் தனி இணையதளம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் துணைவேந்தர் ம. திருமலை.
     தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 50 சதத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
     'பல்கலைக்கழகத்தின் தரமும், புகழும் வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டுமானால், அப்பல்கலைக்கழகத்தின் நூல்கள் வெளியீட்டில்தான் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் நூல்கள் வெளியிடுவதற்கு நிதிப் பற்றாக்குறைப் பெரும் தடையாக இருந்தது. எனவே, பதிப்புத் துறையின் வரவு - செலவு கணக்குத் தனியாகப் பிரிக்கப்பட்டது.
     இந்தத் துறையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சி மூலம் ரூ. 2.80 லட்சத்துக்கு நூல்கள் விற்பனையாகின. இதுவே, இத்துறையில் நிகழ்த்தப்பட்ட விற்பனை சாதனை. நிகழாண்டு கண்காட்சியில் அதை விட அதிக அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     பதிப்பகங்களில் சந்தைப்படுத்தும் முறை மிக மிக முக்கியமானது. எனவே, இந்தப் பதிப்புத் துறையில் வெளியிடப்படும் நூல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி மதிப்புரை பகுதியில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம், நூல்கள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
     மேலும், நூல்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி இப்பதிப்புத் துறை நூல்களையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
     பதிப்புத் துறைக்கு எனத் தனி இணையதளத்தை உருவாக்கி அதில் நூல்கள் தொடர்பாக விளம்பரங்கள் செய்யப்படும். இணையதளம் உருவாக்கும் நடவடிக்கை இரு மாதங்களில் முடிக்கப்படும்.
     இத்துறை நூல்கள் மக்களை விரைவாக அடையக்கூடிய வகையில் தஞ்சையின் மையப் பகுதியில் நூல் விற்பனைக்காக வாடகைக்கு இடம் தேர்வு செய்யப்படவுள்ளது.
     தமிழக அரசு அண்மையில் அளித்த ரூ. 2 கோடியிலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அளித்த ரூ. 70 லட்சத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பதிப்புத் துறைக்கு வழங்கப்படவுள்ளது.
     இந்தத் துறையில் இதுவரை 465 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் அதிக அளவில் நூல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்குள் 14 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
     கம்ப ராமாயணம் எளிய உரைநடை கையடக்க வடிவிலும், பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளை முழுமையாகக் கொண்ட பதிப்பும் வெளியிடும் திட்டமும் உள்ளது' என்றார் திருமலை.
     பின்னர், அவர் தள்ளுபடி விலையில் முதல் விற்பனையைத் தொடக்கி வைக்க, அவற்றை பேராசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டனர்.
     பதிவாளர் (பொறுப்பு) ம. ஜகதீசன், மொழிப் புலத் தலைவர் வ. குருநாதன், தேர்வு நெறியாளர் இரா. அங்கயற்கண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai