Enable Javscript for better performance
906 வருவாய் கிராமங்களில் உழவர் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 906 வருவாய் கிராமங்களில் உழவர் பெரு விழா நடத்தப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.
     தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
     'இரண்டாவது பசுமைப் புரட்சி ஏற்படுத்துவதற்காகத் தமிழக முதல்வர் இந்த உழவர் பெருவிழா திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடர்ந்து இரண்டாமாண்டாக நடத்தி வருகிறார். இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு லாபம் என்ற இலக்கை நோக்கி இந்த விழா நடத்தப்படுகிறது.
     இந்த விழா தொடர்ந்து மே 20-ம் தேதி வரை 906 வருவாய் கிராமங்களில் நடத்தப்படவுள்ளது. இந்தக் கிராமங்களில் மண் மாதிரி பரிசோதனை செய்தல், திருந்திய நெல் சாகுபடி, உயர் தொழில்நுட்ப முறைகள் உள்ளிட்ட வேளாண் திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விளக்கங்கள் அளித்தல், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
     வேளாண்மை சார்ந்த கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
     இந்த விழா நடத்துவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விழா சிறப்பாக நடைபெற ஒன்றியக் குழுத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
     மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 24 கிராமங்களில் 1,200 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்களும், 219 கிராமங்களில் 10,733 பயனாளிகளுக்கு வெள்ளாடு, செம்மறியாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. விலையில்லா கறவைப் பசுக்கள் மூலம் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விலையில்லா ஆடுகள் 6,739 குட்டிகளை ஈன்றுள்ளன' என்றார் பாஸ்கரன்.
     பின்னர், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு விழிப்புணர்வு ரத வாகனங்களைக் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது.
     சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, எம். ரெத்தினசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், வேளாண் துறை இணை இயக்குநர் எம்.இசட். முகமது யாஹியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai