Enable Javscript for better performance
சாஸ்த்ரா பல்கலை. ரூ. 54 லட்சம் நன்கொடை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரூ. 54 லட்சம் நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கியது.

    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார்.

    இதுகுறித்து சேதுராமன் தெரிவித்தது:

    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநுண்நுட்பவியல் மற்றும் உயிரியல் பொருள்சார் உயராய்வு சேர்ந்த மையமும், அடையாறு புற்றுநோய் சிகிச்சைக் கழகமும், புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பற்றி ஆய்வு நிகழ்த்துவதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இரு நிலையங்களும் கைகோர்த்து இது பற்றித் தொடர்நிலை ஆய்வு மேற்கொள்ள இது நல்ல தொடக்கம். புற்றுநோய் தொடர்பான பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அது பற்றிய கல்வியறிவைப் பெறவும், தொண்டு செய்வதற்கும் இது வழிவகுக்கும் என்றார் சேதுராமன்.

    அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி. சாந்தா தெரிவித்தது:

    இரு மையங்களும் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் ஆராய்ச்சியில் புதிய பாதையை வகுத்து அறிவை விரிவாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கணினி வழியே உருக்களைத் துல்லியமாக அலைவழிக் காணும் முறையில் (சிடி ஸ்கேன்) மூன்று சுழலும் லேசர்களை நான்கு "டி' (4டி) திறனுக்கு உயர்த்தப்படவுள்ளது. உருவை நுட்பமாக நோக்குவதற்குரிய வன்பொருள் மென்பொருள்களை வடிவமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தரம்மிக்க சோதனைகள் மேற்கொண்டு அவை தரும் முடிவுகளை உறுதியாகத் தெரிந்துக் கொள்ள இது நன்கு உதவும். கதிர் வீச்சை தெளிவாக அளக்க உதவும் நான்கு டி ஆழ்நிலை முறையோடு இது இணைக்கப்படுவதால் மிக தெளிவான முடிவுகளை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்தப் புதிய வசதி, கதிர்வீச்சுத் திறனை மிகுவிக்கும். திடமான திசுக்களின் மீது குறைந்த விளைவை பாதிப்பு நிகழா வண்ணம் ஏற்படுத்தும். நான்கு பரிமாண உருத் திறன்களால் இது சாத்தியமாகிறது என்றார் சாந்தா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai