Enable Javscript for better performance
ஒரத்தூரில் சோழர் கால விஷ்ணு, சமணர் சிற்பங்கள் கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தூரில் சோழர் கால விஷ்ணு, சமணர் சிற்பங்கள் கண்டெடுப்பு

    By  தஞ்சாவூர்  |   Published on : 18th April 2013 11:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ஒரத்தூரில் சோழர் கால விஷ்ணு, சமணர் சிற்பங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
     திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ஒரத்தூரில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதர் மணி. மாறன், க. மனோகரன் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் பி. ரம்யா, த. சுந்தர் ஆகியோர் துணையுடன் ஆய்வு மேற்கொண்டார்.
     களப் பணியில் கண்ட சிற்பங்கள் குறித்து மணி. மாறன் தெரிவித்தது:
     சேரர்களைப் பற்றிப் பாடும் பதிற்றுப்பத்தின் ஏழாம் பதிகத்தில் ஒரத்தூர் என்று வழங்கப்படும் இவ்வூர் ஒகந்தூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாய வண்ணனை மனனுறப் பெற்றவற் கோத்திர நெல்லின் ஒகந்தூர் ஈந்து எனக் குறிக்கிறது.
     இவ்வூரில் வாழ்ந்து வந்த அக்னிகோத்திர பிராமணர்களுக்கு உணவு வழங்குவதற்காக ஓத்திர நெல் (இராஜ அன்னம்) விளைச்சலைத் தரக்கூடிய நிலம் தானமாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
     இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஊரில் சோழர் காலத்தைச் சார்ந்த மிக அழகிய விஷ்ணு சிற்பம் சிதலமடைந்த கோவிலிலிருந்து எடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டு வரும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
     ஒரே கல்லில் அமைந்த இச்சிற்பத்தில் விஷ்ணு நின்ற கோலத்தில் உள்ளார். மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளன. கீழிரு கரங்கள் முறையே அபய முத்திரையுடனும், கெடி முத்திரையுடனும் உள்ளன. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களுடன் இச்சிற்பம் உள்ளது.
     இந்த ஊரின் குளக்கரையில் உள்ள மரத்தின் கீழ் ஒரு சமண சிற்பம் உள்ளது. இச்சிற்பத்தின் வலது புறத்தில் மிகச் சிறிய உருவத்தில் யட்சனும், இடது புறத்தில் யட்சியும் புடைப்புச் சிற்பங்களாக படைக்கப்பட்டிருக்கின்றன.
     இந்தச் சிற்பங்கள் படைக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். பிற்காலச் சோழர்கள் காலத்தில் சமணமும், பெüத்தமும் அரசின் ஆதரவோடு இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தின. திருக்காட்டுப்பள்ளியும், அதை ஒட்டி அமைந்துள்ள செந்தலை, கருப்பூர், அமண்குடி, அள்ளூர், அழிசிக்குடி போன்ற ஊர்களிலும் சமணம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
     பள்ளி என்பதே சமணம் குறிப்பதாகும். எனவே திருக்காட்டுப்பள்ளி சமணர்கள் மிகுதியாக வாழ்ந்த பகுதி என அறியலாம். அந்த வகையிலும் இவ்வூரில் சமணக் கோவில் இருந்திருந்து பின்னாளில் அழிந்திருக்கலாம்.
     மேலும், இந்த ஊரில் காலை மடித்து அமர்ந்த கோலத்தில் லட்சுமியின் சிற்பமும், விநாயகர் சிற்பமும் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு சிற்றூரிலும் கள ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல புதிய வரலாற்றுச் செய்திகளை அறிய முடியும் என்றார் மாறன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai