"தோல் நாவலை தொடர்புடைய வர்க்கத்தினர் படிப்பது அவசியம்'
By தஞ்சாவூர் | Published on : 18th April 2013 11:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தோல் நாவலை தொடர்புடைய வர்க்கத்தினர் படித்து ஏற்றுக் கொண்டால், அதுவே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்றார் நாவலாசிரியரும், எழுத்தாளருமான டி. செல்வராஜ்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறை, இலக்கியத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்புகள் பற்றிய சிறப்புக் கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது:
எனது முதல் நாவலான மலரும் சருகும் நாவல் தலித்திய நாவல் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இதை நான் ஏற்கமாட்டேன். மார்க்சிய கொள்கையின் அடைப்படையில் சமுதாய மறுமலர்ச்சியைச் சித்திரிக்கும் நாவலாகத்தான் அதைக் கருதுகிறேன்.
சமுதாயமும், இயற்கையும் மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலையில் சமுதாயத்தில் பிற்போக்காக உள்ள கல்லாமை இல்லா சூழலை உருவாக்க வேண்டும். இதை இனம் கண்டு எழுத வேண்டும்.
தோல் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இதைவிட அந்த நாவலை எந்த வர்க்கத்துக்காக எழுதினேனோ, அவர்கள் படித்து ஏற்றுக் கொண்டால்தான், அதுவே எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன் என்றார் செல்வராஜ்.
காந்திகிராமக் கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார் பேசியது:
தோல் நாவல் திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் உள்ள மோசமான நிலையிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு வாழ்க்கையை விவரிக்கிறது.
தொழிற்சங்கங்கள் என்றால் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, போனஸ் பெற்றுத் தருவது உள்ளிட்டவற்றுக்கு போராட்டம் நடத்துவது மட்டுமே என்பது கிடையாது. சமூக மாற்றுத்துக்கும் தொழிற்சங்கங்கள் பாடுபட வேண்டும் என்பதையும் இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது என்றார் ஆனந்தகுமார்.
மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற லவ் ஸ்டான்ட்ஸ் அலோன் நூலாசிரியர் ம. லெனின் தங்கப்பா பேசியது:
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் பெருமை தெரியாது என்பதை தோழர் கோவேந்தன் உணர்த்தினார். அதிலிருந்து மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.
முனைவர் ச. ராதாகிருட்டிணன் பேசியது:
மொழிபெயர்ப்பில் மொழியை விட மூல நாவலில் உள்ள கருத்துதான் முக்கியமானது. அந்த வகையில் லவ் ஸ்டான்ட்ஸ் அலோன் நூல் சிறந்த படைப்பாக இருக்கிறது என்றார் அவர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தலைமை வகித்தார்.
மொழிப்புலத் தலைவர் வ. குருநாதன், வளர்தமிழ்ப் புலத் தலைவர் ஆ. கார்த்திகேயன் வாழ்த்துரையாற்றினர்.
முன்னதாக, மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் இரா.சு. முருகன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சு.ம. பெருமாள் நன்றி கூறினார்.