Enable Javscript for better performance
உலக பாரம்பரிய நாள்: புகைப்படக் கண்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    உலக பாரம்பரிய நாள்: புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 19th April 2013 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக பாரம்பரிய நாளையொட்டி, தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இந்திய தொல்லியல் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

    கல்விப் பாரம்பரியம் என்பதை கருப்பொருளாகக் கொண்ட இந்தக் கண்காட்சியில் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சி குறித்த கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் பெருமளவில் இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாட்டில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ள ஊர் பெயர்கள் கொண்ட பட்டியல் முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் பிராமியுடன் கூடிய சங்க கால நடுகல்கள், கல்வெட்டுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக, தேனி மாவட்டம் புலிமான்கோம்பையில் உள்ள கி.மு. 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல், தாதப்பட்டி நடுகல், மதுரை மாவட்டம் கீழ வளவு, முத்துப்பட்டியில் உள்ள கி.மு. முதல் நூற்றாண்டு மற்றும் கி.பி. முதல் நூற்றாண்டு சமணர் படுக்கைகள், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள கி.மு. முதலாம் நூற்றாண்டு சமணர் படுக்கை, திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சமணர் படுக்கை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முதலாம் நூற்றாண்டு கல்வெட்டு போன்ற புகைப்படங்கள் உள்ளன.

    தவிர, மாமல்லபுரம், பெருவுடையார் கோவில், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள நினைவு சின்னங்கள் குறித்த புகைப்படங்கள், அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கண்காட்சி குறித்து இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டத் துணைக் கண்காணிப்பாளர் கே. அமர்நாத் தெரிவித்தது:

    நிகழாண்டு உலக பாரம்பரிய நாளை கல்விப் பாரம்பரியத்தை மையப் பொருளாகக் கொண்டு கண்காட்சி நடத்துமாறு யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தஞ்சாவூர் பெருவுடையார் கோவில், மாமல்லபுரத்தில் தமிழ் மொழி எழுத்துகள் எப்படியெல்லாம் வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கும் விதமாக இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் 411 நினைவு சின்னங்கள் உள்ளன. இவற்றில் ஈமச் சின்னங்களின் எண்ணிக்கை 163 என்றார் அமர்நாத். இந்தக் கண்காட்சி தொடர்ந்து ஏப். 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் எனவும் தொல்லியல் துறை தஞ்சாவூர் முதுநிலை பராமரிப்பு அலுவலர் பி. வாசுதேவன் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai