Enable Javscript for better performance
மண்ணியாற்றின் குறுக்கே புதிய பாலத்துக்கு அடிக்கல்- Dinamani

சுடச்சுட

    

    மண்ணியாற்றின் குறுக்கே புதிய பாலத்துக்கு அடிக்கல்

    By கும்பகோணம்,  |   Published on : 20th April 2013 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி - தட்டுமால் இடையே மண்ணியாற்றின் குறுக்கே ரூ.66 லட்சம் மதிப்பிலான புதிய வண்டிப்பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.எஸ். மணியனின் தொகுதி மேம்பாட்டு நிதி உதவியுடன் கொத்தங்குடி- தட்டுமால் சாலையை இணைக்கும் வகையில் மண்ணியாற்றின் குறுக்கே 4.25 மீட்டர் அகலத்தில் ரூ. 66 லட்சத்தில் இந்த வண்டிப் பாலம் கட்டப்பட உள்ளது. அதேபோல தில்லையம்பூர் -விருப்பாட்சிபுரத்தை இணைக்கும் வகையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ. 88 லட்சத்தில் பாலம் கட்டப்பட உள்ளது.

    இந்த இரு பாலங்களுக்கும் தலா ரூ.40 லட்சத்தை ஒதுக்கீடு செய்த ஓ.எஸ். மணியன், கொத்தங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டி பேசியது:

    தமிழக முதல்வர் உத்தரவின்படி ஆங்காங்கே பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 6 முக்கிய ஆறுகளில் வடிகால்கள், கழிவு நீர் வாய்க்கால்கள் நிறைய உள்ளன.

    அக்கரையில் ஒரு ஊரும், இக்கரையில் ஒரு ஊரும் உள்ளது. பாலம் இல்லாமல் மக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

    அந்த வகையில் நீலத்தநல்லூர்- மதனத்தூர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து விட்டதாக கூறினர்.

    ஆனால், 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள் நன்றாக இருக்கும் போது, 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள் பழுதடைவது என்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே, தற்போது கட்டப்படும் பாலங்கள் உறுதியாக இருக்க வேண்டும். மேலும், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் பகுதிகளில் 7 பாலங்கள் அமைக்க, ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-13-ல் ஒதுக்கப்பட்ட இந்த நிதிக்கான பணிகளைத் தொடங்க ஆணை பிறப்பிக்க இவ்வளவு நாள் ஆகிவிட்டது. எனவே ஆறுகளில்  தண்ணீர் வருவதற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும்  என்றார் மணியன்.

    விழாவில் முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன்,  ஒன்றியக் குழுத் தலைவர் கோவி. மகாலிங்கம், துணைத் தலைவர் அழகு த. சின்னையன், கும்பகோணம் ஒன்றிய ஆணையர் கீதாரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai