Enable Javscript for better performance
இந்தியாவில் மலச்சிக்கலால்  45சதம் பேர் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் மலச்சிக்கலால்  45சதம் பேர் பாதிப்பு

    By தஞ்சாவூர்,  |   Published on : 22nd April 2013 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் மலச்சிக்கலால் 45 சதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் பெருங்குடல், மலவாய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.

    இதுகுறித்து தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

    உலக அளவில் 50 சதம் பேரும், இந்தியாவில் 45 சதம் பேரும், சென்னையில் கிட்டத்தட்ட 40 சதம் பேரும் மலச்சிக்கலால்  பாதிக்கப்பட்டுள்ளனர். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது அடிப்படை காரணமாக அமைகிறது.

    பெரும்பாலானவர்கள் நாள்தோறும் ஒரு முறை மலம் கழிக்கின்றனர். சிலர் இரு நாள்களுக்கு ஒரு முறை கழிப்பதும் உண்டு. நாளுக்கு ஒரு முறையோ, இரு நாள்களுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தைபடுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.

    நாள்தோறும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது, பழம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது, எண்ணெய் அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது, சிகப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவையே மலச்சிக்கல் நோய் ஏற்படுவதற்குக் காரணங்கள். இவைகளைத் தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளோ இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே, மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும்.

    மலத்துடன் ரத்தம் கலந்து வந்தால், குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம். மலத்துடன் ரத்தம் கலந்து ஆறு வாரங்களுக்கு மேல் வந்தால் அது பெருங்குடல் மலவாய் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. உடனடியாக சிறப்பு மருத்துவர்களை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. நம் நாட்டில் பெருங்குடல் மலவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 சதமாக இருக்கிறது. நம் நாட்டினரிடமும் உணவு பழக்க வழக்க முறை, வாழ்க்கை முறை மாறிவிட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai