சிறு தானியங்கள் சாகுபடி செய்ய வேளாண்துறை வலியுறுத்தல்
By பட்டுக்கோட்டை | Published on : 22nd April 2013 01:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன் செய்து வந்த சிறு தானியங்கள் சாகுபடியை தற்போது மீண்டும் தொடங்க வேண்டும் என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் ஆர். மோகன் பேசியது:
சோளம், மக்காச்சோளம், வரகு, கம்பு, கேழ்வரகு ஆகியவை சிறு தானியங்கள் ஆகும். திணை, சாமை, குதிரை வாலி போன்றவை மிகச் சிறு தானிய வகைகளைச் சேர்ந்தவை. குறைந்த நீரில் இவற்றை சாகுபடி செய்து 110 முதல் 130 நாள்களில் அறுவடை செய்யலாம்.
பட்டுக்கோட்டை பகுதியில் சுமார் 5,423 ஹெக்டேர் பரப்பு நிலங்கள் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் தரிசு நிலங்களாக உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சுமார் 3000 ஏக்கரில் சிறு தானியங்கள் பயிரிடப்பட்டன. ஆனால் தற்போது தனி நபரின் பொருள் வாங்கும் திறன் அதிகரிப்பு, நகரமயமாதல் அதிகரிப்பு, அரிசி சார்ந்த உணவுப் பொருள்களில் நுகர்வோர் காட்டும் அதிக ஈடுபாடு போன்ற காரணங்களால் இப்பகுதியில் சிறு தானியங்கள் சாகுபடி வெகுவாக குறைந்து விட்டது.
எனவே, இனி வரும் காலங்களில் உணவுத் தேவையை சமாளிப்பதற்கு நாம் அரிசியை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது. இந்தச் சூழலில் மாற்றுப் பயிராக சிறு தானியங்களைப் பயிரிடலாம்.
சிறு தானியத்தில் செய்யப்படும் திணை இட்லி, சோளப் பணியாரம், கேழ்வரகு தோசை, கம்பு அடை, வரகு புளியோதரை, குதிரை வாலி பொங்கல் போன்றவை ருசியாக இருப்பதுடன் இவற்றில் அதிக அளவில் தாதுப் பொருள்கள், உயிர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை அடங்கியிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இவற்றை உண்பதால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
எனவே ராஜாமடம் பகுதி விவசாயிகள் தங்களுடைய தரிசு நிலத்தில் வரும் ஆடி பட்டத்தில் சிறு தானிய வகைகளைப் பயிரிட்டு பயனடையலாம் என்றார் அவர்.