Enable Javscript for better performance
டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நடைபெறுமா?- Dinamani

சுடச்சுட

    

    டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நடைபெறுமா?

    By தஞ்சாவூர்  |   Published on : 24th April 2013 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களில் நிகழாண்டு தூர் வாரும் பணி குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கோடைகாலத்தில் ஆண்டுதோறும் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்போது, ஆறுகள், வாய்க்கால்களில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைச் செடிகள், நெய்வேலி  காட்டாமணக்குச் செடிகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீரோட்டம் தடையின்றி செல்வதற்கான வழி ஏற்படுத்தப்படும். மேலும், தடுப்பணைகளின் அடைப்புப் பலகைகள் மராமத்து செய்தல், கரைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறும்.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு தடையின்றி சென்றடைவதற்காகவும், வெள்ளக் காலத்தில் மழை நீர் விரைவாக வடிவற்காகவும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இதுதொடர்பாக 2011-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரசாணை பிறக்கப்படவில்லை என்றாலும், பராமரிப்பு நிதியாக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில், நிகழாண்டு தூர்வாரும் பணிக்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.   

    ""தூர் வாரும் பணி தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கையிலும் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு கால அவகாசம் இருந்தும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. நிகழாண்டும் கால அவகாசம் இருந்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது'' என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலர் சுவாமிமலை விமல்நாதன்.  

    ஏற்கெனவே மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் நிகழாண்டு தாமதமாகத்தான் அணை திறக்கப்படும் சூழல் நிலவுகிறது. திறந்துவிடப்பட்டாலும் தண்ணீர் முழுமையாகக் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. திறந்துவிடப்படும் குறைந்த அளவு தண்ணீரும் தற்போதுள்ள நிலையில் கடைமடைப் பகுதியல்ல, இடைப்பட்ட பகுதிகளுக்குக் கூட செல்லுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த அளவுக்கு ஆறுகளில் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. இதை விட மிக மோசமான நிலையில் வாய்க்கால்கள் உள்ளன.

    டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் ஏறத்தாழ 750 கி.மீ. தொலைவுக்கு தூர் வாருவதற்காக சுமார் ரூ.10 கோடியில் கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்கின்றனர் பொதுப்பணித் துறை அலுவலர்கள்.

    ஆனால், நிகழாண்டு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தை எட்டிய நிலையில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால், நிகழாண்டும் மேட்டூர் அணை தண்ணீர் விவசாயத்துக்குப் பயனில்லாமல் போகும். இதேபோல, மழைகாலத்திலும் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாத நிலை ஏற்படும்.

    எனவே, நிகழாண்டு தண்ணீர் வரத்து தாமதமாகும் சூழ்நிலையை டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை முழுமையாகத் தூர் வாரும் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai