Enable Javscript for better performance
தஞ்சை மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க எதிர்ப்பு

    By  தஞ்சாவூர்  |   Published on : 25th April 2013 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்க அப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
     தஞ்சாவூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, இந்த மாநகராட்சியில் மாரியம்மன் கோவில், கத்தரி நத்தம், நாஞ்சிக்கோட்டை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சி ஆகியவற்றை இணைக்கக் கோரும் தீர்மானம் தஞ்சாவூர் நகர்மன்றக் கூட்டத்தில் ஏப். 12-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
     இதில், கத்தரி நத்தம் ஊராட்சியை சேர்க்கக் கூடாது என அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     இந்நிலையில், தஞ்சை மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சியை இணைக்கக் கூடாது என வல்லம் பேரூராட்சி பொது நலக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வல்லம், தஞ்சை நகரில் பிரதான இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.
     அதில், தஞ்சை மாநகராட்சியோடு வல்லம் பேரூராட்சியை இணைக்காதே, பேரூராட்சியைத் தரம் உயர்த்து, பேரூராட்சியை இணைக்கக் கோரும் தஞ்சை நகராட்சி தீர்மானத்தை கண்டித்து ஏப். 25-ம் தேதி கண்டனக் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
     மேலும், வல்லம் அண்ணாசிலை அருகில் வியாழக்கிழமை கண்டனக் கூட்டமும், வல்லம் பேருந்து நிலையம், அகிலாங்கரை தெரு, சென்னம்பட்டி சாலை ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை தெருமுனை பிரசாரமும் நடைபெறவுள்ளது.
     இதுகுறித்து குழுவைச் சார்ந்த க. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தது:
     வல்லம் பேரூராட்சி 127 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. ஏறத்தாழ 25,000 பேர் வாழும் இந்த பேரூரில் பல்கலைக்கழகம், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன.
     இந்தப் பேரூராட்சியை தஞ்சாவூர் நகராட்சியுடன் இணைத்தால் சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை பல மடங்கு உயரும். மேலும், வல்லம் பேரூராட்சியின் தனிச் சிறப்பு அழிந்துவிடும்.
     வல்லத்தில் உள்ள பல தெருக்கள், மின்நகர், தேவாரம் நகர், ராமலிங்கபுரம், திருவள்ளுவர் நகர், எம்.ஜி.ஆர். நகர் போன்ற பகுதிகளை வல்லம் பேரூராட்சியுடன் இணைத்து அதை தரம் உயர்த்த வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai