Enable Javscript for better performance
\\\"சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவை'

    By தஞ்சாவூர்  |   Published on : 26th April 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்  தொடங்கப்பட வேண்டும் என்றார் நெக்ஸ்ட்வெல்த் தொழில்முனைவோர் நிறுவன நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஸ்ரீதர் மிட்டா.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா ஆண்டையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 3 நாள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

    நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு இந்தத் துறை மிகப் பெரியளவில் கைகொடுக்கிறது. இந்தத் துறையில் மற்ற நாடுகளைவிட நம் நாடு முன்னோடியாக இருக்கிறது.

    ஆனால், இந்தத் துறையில் சில முக்கியப் பிரச்னைகளும் உள்ளன. குறிப்பாக,  ஏராளமானோர் கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லும் நிலை உள்ளது. 

     ஆண்டுதோறும் 5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இதில், தென்னிந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம். இவர்களில், 80 சத ஆண்கள் பெரு நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.

    பெண்களில் 10 சதத்துக்கும் குறைவானவர்களே பெரு நகரங்களுக்குச் செல்கின்றனர். என்றாலும், பட்டம் பெறுவோரில் 20 சதம் பேர் மட்டுமே முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுகின்றனர்.

    ஆனால், திறமை வாய்ந்த பொறியாளர்கள் கிராமப்புறங்களில் அதிகளவில் உள்ளனர். பெரும்பாலான பெண்களை அவர்களுடைய பெற்றோர்கள் பெரு நகரங்களுக்கு அனுப்ப அனுமதிப்பதில்லை.

    இவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரு நகரங்களிலிருந்து சிறு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதன் மூலம் திறமை வாய்ந்த கிராமப்புறப் பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும்.

    சிறு நகரங்களில் தொழில் தொடங்குவதற்கு உதவிகளும் கிடைக்கின்றன. தொலைத்தொடர்பு வசதியும் உள்ளதுடன் செலவும் குறைவாக இருக்கிறது.

    இதன் அடிப்படையில் நெக்ஸ்ட் வெல்த் நிறுவனம் சேலம் அருகேயுள்ள மல்லசமுத்திரம், ஆந்திர மாநிலம் சித்தூர் உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார் ஸ்ரீதர் மிட்டா.   பல்கலை. வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார்.

    மேலும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பு உயராய்வு மையத்தை இந்திய அறிவியல் கழகத்தின் வான் பொறியியல் துறைத் தலைவர் கே.பி.ஜே. ரெட்டி தொடக்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் ஆளுகை மென்பொருள் தொகுப்பான பிரைன் வி 2.13-ஐ திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநர் ஏ.வி. கிருஷ்ணன் வெளியிட்டார்.

    இந்திய கணினிக் கழகத் துணைத் தலைவர் எச்.ஆர். மோகன், அப்துல்கலாமின் ஆலோசகர் வி. பொன்ராஜ், பல்கலைக்கழகப் பதிவாளர் மு. அய்யாவு, இணைத் துணைவேந்தர் தவமணி உள்ளிட்டோர்   பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai