பேராவூரணியில் நீதிமன்றம் அமையுமா?
By பேராவூரணி | Published on : 26th April 2013 02:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டுமெனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்கள், 2 பேரூராட்சிகள், 63 ஊராட்சிகளைக் கொண்டது.
பேராவூரணி பகுதி மக்கள் வழக்குகளுக்காக கடந்த பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டை நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேராவூரணியின் கடைசி எல்லையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சுமார் 70 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விரயமும், அதிகச் செலவும் ஆகிறது.
எனவே, பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஒரு நீதிமன்றம் அமைக்கத் தேவையான வழக்குகள் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் 500-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள், பிறப்பு, இறப்பு தொடர்பான பலவகை மனுக்கள் 1000-க்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன.
1989 -ல் திமுக ஆட்சியின்போது ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசாணை பிறபிக்கப்பட்டது. பேராவூரணி 1975-ல் இருந்து தனித் தாலுகாவாக செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அறிக்கை வெளியிடப்பட்டு, புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக முயன்றும் பேராவூரணியில் நீதிமன்றம் அமையாமல் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு பேரவைத் தேர்தலின்போதும் ஆளுங்கட்சிக்கு எதிரானவர்களே இந்தத் தொகுதியில் தேர்வு பெறுவதால் வளர்ச்சிப் பணிகளில் பேராவூரணி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவான நடிகர் அருண்பாண்டியன் ஆளும்கட்சிக்கு ஆதரவானவராக மாறி, தொகுதியின் வளர்ச்சிக்காக முதல்வரைச் சந்தித்ததாகக் கூறிய நிலையில், பேராவூரணியில் அரசுக் கலைக்கல்லூரி நிகழாண்டில் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
எனவே, நீதிமன்றக் கோரிக்கையையும் முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேராவூரணி வழக்குரைஞர் ப. பாலசுப்பிரமணியன் கூறியது:
பேராவூரணியைவிட மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் சிறிய தாலுகாக்களில் எல்லாம் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் காரணங்களினால் இங்கு நீதிமன்றம் அமையாமல் உள்ளது.
எனவே, பேரவையில் நடைபெறும் சட்டம் மற்றும் நீதித் துறை மானியக் கோரிக்கையில் இதுகுறித்த உத்தரவை முதல்வர் வெளியிட வேண்டும் என்றார்.