Enable Javscript for better performance
திருவையாறில் இன்று ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவையாறில் இன்று ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழாதஞ்சை மாவட்டத்தில் திருவையாறை மையமாகக் கொண்ட சப்த ஸ்தானம் என்ற ஏழூர் பல்லக்குத் திருவிழா புகழ் பெற்றது. சித்திரை மாதம் முழு நிலவின் மறுநாள் ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் பெரிய பல்லக்கில் (கண்ணாடி பல்லக்கு), புதுமணத் தம்பதியான நந்தியெம் பெருமாள் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கில் திருவையாற்றிலிருந்து புறப்படுவர். அன்று காலை கிழக்குக் கோபுர வாசலில் நிகழும் நிகழ்வுக்கு கோபுர தரிசனம் எனப் பெயர்.

    காலை 6 மணிக்குப் புறப்படும் பல்லக்கு திருப்பழனம் வந்து சேரும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊர் பெருமானும், பெருமாட்டியும் இவர்களை எதிர்கொண்டு அழைத்து மரியாதை செய்து தங்களது ஊர் பல்லக்கில் அடுத்த ஊருக்குக் கூடவே செல்வர்.

    அதன்படி, திருவையாறில் இருந்து வந்த இரு பல்லக்குகளையும், திருப்பழனத்துக்கு அழைத்து மரியாதை செய்யப்படும். இதையடுத்து, சப்தஸ்தான தலங்களில் மூன்றாவது தலமாகிய திருச்சோற்றுத்துறை நோக்கி பல்லக்குகள் புறப்படும். ஐயாறப்பர் மணமக்கள் வந்த பல்லக்குடன் திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் பல்லக்கும் உடன் வரும்.

    சித்திரை வெயில் காவிரி மணல் தணலாக சுடும் என்பதால், அதன் மீது கரும்புத் தோகைகளை பரப்பி பல்லக்கை தூக்கிச் செல்வர்.

    பின்னர், திருச்சோற்றுத்துறை பல்லக்கையும் அழைத்து கொண்டு நான்காவது தலமான திருவேதிக்குடி நோக்கி ஐயாறப்பர் செல்வார். அங்கு இறைவன் வேதபுரீஸ்வரர் பல்லக்கையும் அழைத்துக் கொண்டு 5 பல்லக்குகளும் ஐந்தாவது தலமான கண்டியூரை நோக்கிச் செல்லும்.

    அங்கு கண்டீசுவரர் பல்லக்குடன் 6 பல்லக்குகளும் ஆறாவது தலமான திருப்பூந்துருத்திக்குச் செல்லும். பின்னர், திருப்பூந்துருத்தி பல்லக்குடன் சேர்ந்து 7 பல்லக்குகளும் மீண்டும் குடமுருட்டி, காவிரி ஆறுகளைக் கடந்து ஏழாவது தலமான திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானத்தை சென்றடையும்.

    இந்த ஊருக்கு 7 பல்லக்குகளும் விடிய விடிய வந்து சேரும். இரவில் காவிரியாற்றில் விளக்கொளியில் பல்லக்குகள் முகாம் போடும். இத்துடன் எட்டாவதாக தில்லைஸ்தானம் பல்லக்கும் சேர்ந்து கொள்ளும்.

    அதிகாலை தில்லைஸ்தானம் காவிரியாற்றில் கண் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். நிலவின் ஒளியில் பல்லக்குகள் பின்னணியில் வாண வேடிக்கை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    மறுநாள் காலை பல்லக்குகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டு பிற்பகல் திருவையாறு தேரடி திடலை சென்றடையும். அன்று மாலை ஐயாறப்பர் கோவில் எதிரில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி மகிழ்ச்சி முழக்கமிடுவர்.

    அதன் பின்னர், ஏழூர் பல்லக்குகளும் ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று சிரம பரிகாரம் செய்து நீர் மோர், பானகம் அருந்தி மரியாதைகள் பெற்று, ஒவ்வொன்றாக சொந்த  ஊருக்குத் திரும்பும்.

    இதன்படி, நிகழாண்டு சனிக்கிழமை காலை திருவையாறு கிழக்குக் கோபுர வாசலில் கோபுர தரிசனம் என்கிற பெரிய பல்லக்கும், வெட்டிவேர் பல்லக்கும் புறப்படுகின்றன. இதையடுத்து, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்குச் சென்று தில்லைஸ்தானத்துக்கு இரவு சென்றடையும். இரவில் அங்கேயே 8 பல்லக்குகளும் முகாமிடும். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒவ்வொன்றாகப் புறப்பட்டு திருவையாறு தேரடி திடலை சென்றடையும். தேரடியில் மாலை பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    டி. கோவிந்தராஜூ,

    செயல் அலுவலர்,

    இந்து சமய அறநிலையத் துறை,

    தஞ்சாவூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai