Enable Javscript for better performance
விவசாயிகள் கருப்புப் பட்டையுடன் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.

    ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர். கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகளைக் கண்டித்தும், மும்முனை மின்சாரம் 3 மணி நேரம் கூட விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்தும் கருப்புப் பட்டை அணிந்துள்ளதாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சொக்கலிங்கம் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆட்சியரின் அறிக்கையை வாசித்தார். அப்போது, பகலில் 3 மணிநேரமும், இரவில் மின் தொகுப்பு நல்ல நிலையில் இருந்தால் 3 மணிநேரமும் என மொத்தம் 6 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

    3 மணிநேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தவறாக உள்ளதால், அதை ஏற்க முடியாது. மின்வாரிய அலுவலர் உரிய பதில் அளிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சி.எம். ரவீந்திரன் பேசியது:

    இப்போது 6 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றாலும், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போதும், மின் தொகுப்பிலிருந்து சீரான மின்சாரம் கிடைக்கும்போதும் 6 மணிநேரம் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகளின் கருத்துக்கள் மேலிடத்துக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன்: விவசாயத்துக்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அது அறிவிப்போடு உள்ளது. கோடை சாகுபடியைக் காப்பாற்ற நாள்தோறும் குறைந்தபட்சம் 12 மணிநேரம் முன்முனை மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்

    ஆட்சியர் கா. பாஸ்கரன்: ஏற்கெனவே, இதுதொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 மணிநேரம் மும்முனை மின்சாரமும், 20 மணிநேரம் மின்சாரமும் விநியோகம் செய்யுமாறு அரசுக்கு எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai