Enable Javscript for better performance
\\\"பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிகளவில் ேலைவாய்ப்புகள்\\\'தஞ்சாவூர்- Dinamani

சுடச்சுட

    

    "பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிகளவில் ேலைவாய்ப்புகள்'தஞ்சாவூர்

    By தஞ்சாவூர்  |   Published on : 28th April 2013 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டாலும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இன்னும் ஏராளமாகக் காத்திருக்கின்றன என்றார் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தமிழ்நாடு - புதுச்சேரிப் பிரிவு தலைவர் ஏ.கே. நடேசன்.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழாவையொட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்ற 3 நாள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திருவிழாவின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

    நம் நாட்டில் ஆண்டுக்கு 1.75 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். பொறியியல் துறையில் இவ்வளவு மாணவர்கள் உருவானாலும் கூட அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

    நம் நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன. சாலைகள் வளர்ச்சியில் 5 சதம் கூட எட்டப்படவில்லை. எனவே, சிவில், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பொறியியல் படித்தால் வேலை இல்லை எனக் கூறுவது உண்மை இல்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் சிந்தனைத் திறனை மேம்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களால் இப்போது நகரங்கள் வெளிநாட்டுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால், நம் நாட்டில் சேவைத் துறையில் கவனம் செலுத்தும் அளவுக்கு உற்பத்தி துறையில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனால், உற்பத்தி துறையில் மிகவும் பின் தங்கியுள்ளோம். கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அவை அனைத்தும் சீனா, கொரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கின்றன. நம் நாட்டில் ஆய்வுப் பணிகள் மிகவும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.

    2010 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதீதமான வளர்ச்சியை எட்டினோம். அதேபோல, 2020 ஆம் ஆண்டில் புதிய பரிமாணத்தில் வளர்ச்சி பெற்றால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும்.

    முனைவர் பட்டம் பெற்ற பொறியியல் பேராசிரியர்களுக்கு நேரமும், அறிவுத் திறனும் அதிகமாக இருக்கிறது. ஆய்வுப் பணிக்காக அரசு நிதியுதவியும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பொறியியல் பேராசிரியர்கள் பயன்படுத்திக் கொண்டால் ஆய்வுத் துறையில் முன்னேற்றம் அடையலாம்.

    பொறியியல் பட்டப்படிப்பு படித்ததன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் ஏராளமானோர் உயர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எனவே, பொறியியல் மாணவர்கள் செயல்முறை திறனையும் பெற்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் நடேசன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    மின், மின்னணு நிறுவன மகளிர் பொறியாளர் குழு முன்னாள் தலைவர் ராமலதா மாரிமுத்து வாழ்த்துரையாற்றினார். அறிவியல் புல முதன்மையர் ஜயக்குமார், துணை முதன்மையர் லட்சுமி, மின்னணு தொலைத்தொடர்பு துறைத் தலைவர் வயலட் ஜூலி, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் க. ஜகஜோதி, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் ந. வெற்றிவேலன், மென்பொருள் துறைத் தலைவர் ஏ. சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai