Enable Javscript for better performance
5 பேருந்துகள், கார் கண்ணாடிகள் உடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை முக்குலத்தோர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 5 அரசுப் பேருந்துகள், கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன .

    திருவையாறு பகுதியில் முக்குலத்தோர் பாதுகாப்புப் பேரவை சார்பில்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற அப்பேரவையின் தலைவர் செங்குட்டுவன் வாண்டையாரை நடுக்காவிரி அருகே போலீஸார் கைது செய்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் கிழக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இரு மாதங்களுக்கு முன்பு தஞ்சையில் நடைபெற்ற அப்பேரவையின் மாநாட்டில் ஜாதி பிரச்னையை தூண்டும் விதமாக அவர் பேசினாராம். இதுதொடர்பாக செங்குட்டுவன் வாண்டையார் உள்பட சிலர் மீது தஞ்சை கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்நிலையில், திருவையாறு பகுதியில் கொடியேற்று விழாவை அவர் காவல் துறை அனுமதியின்றி நடத்தியதாகவும், கிழக்குக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாகவும் அவரை போலீஸார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் நுழைவு அருகில், மாரியம்மன் கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் தலா ஒரு அரசுப் பேருந்தும், டான்டெக்ஸ் ரவுண்டானா அருகில் இரு அரசுப் பேருந்துகள், கார் ஆகியவற்றின் மீதும் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தினர். இதில், பேருந்துகள், கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், செங்குட்டுவன் வாண்டையார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை மாநில துணைப் பொதுச் செயலர் முத்தழகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கண்டியூரில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai