Enable Javscript for better performance
தமிழ்ப் பல்கலை.க்கு ரூ.18.19 கோடி நிதி உதவி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.18.19 கோடி நிதி உதவி கிடைத்துள்ளது என்றார் துணைவேந்தர் ம. திருமலை.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் அவர் பேசியது:

    பல்கலைக்கழக நிதி நல்கை குழுவிடமிருந்து ரூ.2.60 கோடி, இந்திய வரலாற்று ஆய்வுக் குழுமம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய தேசிய அறிவியல் அகாதெமி ஆகியவற்றிடமிருந்து ரூ.21.34 லட்சம், தமிழக அரசிடமிருந்து ரூ.15.38 கோடி என மொத்தம் ரூ.18.19 கோடி கிடைத்துள்ளது.

    மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திடமிருந்து தொல்காப்பியர் பெயரில் ஆய்வு இருக்கைக்காக ரூ.1 கோடியும், நில அறிவியல் துறையில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்துவதற்காக ரூ.1 கோடியும் பெறப்படவுள்ளன. பல்கலைக்கழகக் கட்டட மற்றும் வளாகப் பராமரிப்புக்காக தமிழக அரசு ரூ.2 கோடி வழங்கவுள்ளது. தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 1.30 கோடி மூலம் 59 ஆய்வுத் திட்டங்கள் புதிதாகச் செயல்படுத்தப்படவுள்ளன.

    தொலைநிலைக் கல்வி மையத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைநிலைக் கல்விக் குழுவிடமிருந்து ரூ.30 லட்சம் பெறப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 19 பட்டயப் படிப்புகளும், 3 இளநிலைப் பட்டப் படிப்புகளும், 2 முதுநிலை படிப்புகளும் என மொத்தம் 24 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளி நிறுவனங்களுடன் இணைந்து தொடு சிகிச்சை, அக்குபங்சர், கணினி, யோகாவும் மனித மாண்பும் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தானே கற்றல் முறையில் பாடத் திட்டங்கள் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

    கனடா, சிங்கப்பூர், மலேசியா, துபை, பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்விப் படிப்பு மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஆட்சிக்குழு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககத்துக்குத் தனியாகக் கட்டட வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் திருமலை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai