சுடச்சுட

  

   பெரியார் மணியம்மை பல்கலை.யில்ஆக. 30-ல் வேளாண் தொழில்நுட்ப விழா

  By தஞ்சாவூர்  |   Published on : 27th August 2013 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்பத் திருவிழா ஆக. 30-ம் தேதி தொடங்கவுள்ளது.

  இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

  இந்தப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஒன்றாக இந்த விழா நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் ஆக. 30, 31-ம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 12 தலைப்புகளில் அமர்வுகள் நடத்தி, விவாதிக்கப்படவுள்ளது. இவை தீர்மானங்களாகவும் இயற்றப்படவுள்ளன.

  ஒவ்வொரு அமர்விலும் வேளாண் அறிஞர் ஒருவரும், முன்னோடி விவசாயிகள் இருவரும் பேசவுள்ளனர். கேள்வி - பதில் மற்றும் தீர்மானங்கள் இயற்றுதல் ஆகியவற்றுடன், அந்த அமர்வை வழிநடத்தும் நிபுணர் தன்னுடைய கருத்துகளையும் விளக்குவார்.

  மேலும், இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்தக்கூடிய வேளாண் கருவிகள், விதைகள், உரங்கள், பூச்சிமருந்துகள், உயிரி உரங்கள், பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள் உள்பட 60-க்கும் அதிகமான காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கையேடும் வெளியிடப்படவுள்ளது.

  ஆக. 30-ம் தேதி காலை பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவை தோட்டக்கலை வல்லுநர் த. வெங்கடபதி ரெட்டியார் தொடக்கிவைக்கிறார். ஆக. 31-ம் தேதி மாலை நிறைவு விழா நடைபெறவுள்ளது என்றார் அவர்.

  காவிரி டெல்டா மேம்பாட்டு ஆய்வு மையத் தலைவர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன், பல்கலைக்கழக ஊரக மேம்பாட்டு மைய ஆலோசகர் எஸ். சாமி சுப்பிரமணியன், தமிழ்நாடு திட்டக் குழு முன்னாள் உறுப்பினர் ஜி. சிதம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai