கவிநாட்டில் சமணர் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட சிலை சமணர் சிலை என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பா. ஜம்புலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட சிலை சமணர் சிலை என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பா. ஜம்புலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் கட்டியாவயல் அருகேயுள்ள கவிநாடு கண்மாயில் அண்மையில் 3.5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ள புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சிலை புத்தர் சிலையா, சமணர் சிலையா என்பதை அறிவதற்காக புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த அச்சிலையை நேரில் பார்த்த உடனேயே அது சமணர் சிலை என்பதை அறிய முடிந்தது. சிலையின் அமைப்பை ஒவ்வொன்றாக நோக்கியபோது அக்கருத்து இன்னும் வலுப்பெற்றது.

சுருள் முடியை புத்தர் சிலைகளிலும், சமணர் சிலைகளிலும் காண முடியும். புத்தர் சிலையின் தலையில் வழக்கமாகக் காணப்படுகிற தீச்சுடர் வடிவிலான முடி கவிநாடு கண்மாயில் உள்ள சிலையில் காணப்படவில்லை. அது, இருந்ததற்கான அடையாளமும் அச்சிலையில் இல்லை. நெற்றியில் திலகக்குறி காணப்படவில்லை. கையில் தர்ம சக்கரக்குறி இல்லை. மார்பில் ஒரு கோடு போல ஆடை இருப்பதாகத் தோன்றினாலும், நேரில் பார்த்தபோது மேலாடை தெரியவில்லை. இவையனைத்துக்கும் மேலாக இச்சிலையின் பின்புறத்தை நோக்கும்போது ஆடையில்லாமல் இருப்பதை அறிய முடிந்தது. சிலையில் ஆடையில்லாமல் இருப்பதை இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி மூலம் தெளிவாக அறிய முடிந்தது. இச்சிலை சமணர் சிலை என்பதை உறுதிப்படுத்த சிலையின் பின்புறத்தை நோக்க வேண்டியது அவசியம். இந்தக் காரணங்களின் அடிப்படையில் இது சமண தீர்த்தங்கரர் சிலை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

புதுக்கோட்டையில் அதிகமான எண்ணிக்கையில் சமண தீர்த்தங்கரர் சிலைகளே கிடைத்துள்ளன. சோழ நாட்டில் பெüத்தம் என்ற எனது ஆய்வுத் திட்டம் தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிற களப்பணியின்போது சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்த போதிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் புத்தர் சிலையைக் காண முடிந்தது. புதுக்கோட்டை ஒரு மிகச் சிறந்த சமண மையமாக இருந்ததை உறுதிசெய்யும் சான்றாக கவிநாடு பகுதியில் இந்தச் சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com