பெரும்பாலான மகளிர் சுய உதவிக் குழுவினர் உணவுப் பொருள்கள் தயாரித்தல், கைவினைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டு வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட ஆழியவாய்க்கால் கிராமத்தில் இயங்கி வரும் கதிரவன் மலர் மகளிர் சுய உதவிக் குழுவினர் குளியல் சோப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்தவித ரசாயன பொருள்களும் அல்லாத முற்றிலும் தாவரங்கள், மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட மூலப்பொருள்கள் மூலம் சந்தனம், கற்றாழை, நெல்லி, கற்றாழை பிளஸ் என 4 வகையான குளியல் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
மூலப்பொருள்களைக் கலந்து இயந்திரத்தில் இட்டு, தண்டு வடிவில் வரும் சோப்புகளை நீள்வட்ட வடிவில் அறுத்து சோப்பாக தயாரிக்கும் வரையிலான அனைத்து பணிகளையும் பெண்களே மேற்கொண்டு வருகின்றனர்.
2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ. 7.50 லட்சம் நிதியுதவி வழங்கியது. இதில், ரூ. 2.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. இந்தக் கடனை இரு ஆண்டுகளுக்கு முன்பே திருப்பிச் செலுத்திவிட்டோம் என்கிறார் அக்குழுவின் தலைவர் ஆர். கிருஷ்ணவேணி. இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:
இந்த நிறுவனத்தில் மாதத்துக்கு 3 லட்சம் சோப்புகள் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இப்போது, மாதத்துக்கு ஏறத்தாழ 35,000 சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
மூலப்பொருள்கள் விநியோகம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஒரு சோப்பு தயாரிப்பதன் மூலம் கூலியாக ரூ. 2 கிடைக்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு பெண்ணும் மாதத்துக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை வருவாய் ஈட்டுகிறோம். இந்த நிறுவனத்தில் 18 உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சோப்புகளுக்கு சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தால் இன்னும் அதிகமான சோப்புகள் உற்பத்தி செய்யலாம்.
இப்போது, அலாய் என்கிற கற்றாழை சோப்பு, ஆலோவிர் பிளஸ் என்கிற கற்றாழை சோப்பு, ஆழி என்கிற சந்தன சோப்பு, மேனி என்கிற நெல்லி (ஆம்லா) சோப்பு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன என்றார் கிருஷ்ணவேணி.
இந்த நிறுவனத்தை ஆட்சியர் என். சுப்பையன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அவர் தெரிவித்தது: உடலுக்கு எந்தவிதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த சோப்புகள் பள்ளி மாணவர் விடுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன என்றார் ஆட்சியர்.
அப்போது, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கன்னியாகுமரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.