விவசாயியை கொன்று சடலம் ஆற்றில் புதைப்பு

பாபநாசம் அருகே விவசாயியை கொன்று சடலத்தை ஆற்றில் புதைத்திருந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
Published on
Updated on
1 min read

பாபநாசம் அருகே விவசாயியை கொன்று சடலத்தை ஆற்றில் புதைத்திருந்தது புதன்கிழமை தெரிய வந்தது.

பாபநாசம் அருகேயுள்ள நல்லூர் கிராமத்துக்கு அருகில் செல்லும் முடிகொண்டான் ஆற்றின் நடுவே கைகள் வெளியே தெரிந்த நிலையில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை இரவு தெரிய வந்தது. தகவலின் பேரில், பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவாஜிஅருட்செல்வம், காவல் ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரமானதால் சடலத்தை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முற்பகல் வலங்கைமான் வட்டாட்சியர் வெங்கட்ராமன் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இறந்த நபர் கழுத்து அறுக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றுமணலில் புதைக்கப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை பிடிக்க துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். திருவாரூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பாபநாசம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த நபர் குறித்த விவரம் தெரிய வந்தது. இறந்தவர் பம்பப்படையூர் அண்ணா வீதியை சேர்ந்த மாணிக்கம் மகன் செல்வம் (40) என்பதும், விவசாயியான அவருக்கு ராஜாத்தி (35)என்ற மனைவியும், இரண்டு மகன், நான்கு மகள்கள் இருப்பதும் தெரிய வந்தது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வம் அதன் பிறகு வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், ஆற்றுமணலில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்வையிட்ட செல்வத்தின் உறவினர்கள் அது செல்வம்தான் என்பதை உறுதி செய்தனர். செல்வத்தின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து, எதனால், யாரால் செல்வம் கொலை செய்யப்பட்டார் என விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com