கும்பகோணத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகராட்சி சார்பிலான இந்தப் பேரணியை மகாமக குளம் அருகே தொடங்கி வைத்து ஆட்சியர் என். சுப்பையன் பேசியது: பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் துணிப்பைகள், காகிதப் பைகள், சணல் பைகளை உபயோகப்படுத்த வேண்டும். பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்ல முன்வர வேண்டும் என்றார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி காந்தி பூங்காவை சென்றடைந்தது. இதில் கும்பகோணம் சார் ஆட்சியர் கோவிந்தராவ், மாவட்ட திட்ட அலுவலர் வரதராஜன், நகராட்சி ஆணையர் கலைச்செல்வன், வட்டாட்சியர் கிருஷ்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் ராஜாநடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டையில்....இதேபோல், பட்டுக்கோட்டையில் நகராட்சி மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ என்.ஆர். ரெங்கராஜன் தொடங்கிவைத்தார். இதில் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுவாமிமலையில்....பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரசாரத்துக்கு பேரூராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணஸ்தபதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தலை தடுத்தல் குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியாக சுவாமிமலை முக்கிய வீதிகளை சுற்றி பள்ளியை சென்றடைந்தனர். இதைத் தொடர்ந்து சுவாமிமலை கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேராவூரணியில்.... பேரூராட்சி சார்பிலான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பரிமளாநீலகண்டன் முன்னிலை வகித்தார்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், சாரணர் இயக்கம், என்சிசி, தேசிய பசுமைப்படை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பாபநாசத்தில்..... பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பேரூராட்சி மன்றத் தலைவர் எம். கருணாநிதி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வர்த்தகர் சங்கத்தினர், லயன்ஸ், ரோட்டரி சங்கத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி இறுதியில் பள்ளியை அடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.