தஞ்சாவூர், செப். 23: பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக். 6-ம் தேதி சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம் தெரிவித்திருப்பது:
பழைய காப்பீட்டுத் திட்டத்தில் வருவாய் சரக வாரியான கணக்கெடுப்பு என்பதை மாற்றி பயிர் பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் தனி நபர் பயிர் காப்பீடாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் 7 வகையான பயிர்கள்தான் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் மாறுதல் செய்து அனைத்துப் பயிர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
2012 - 2013-ம் ஆண்டில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 2014-15-ம் ஆண்டுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி 4% வட்டியில் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலர்கள் பி.எஸ். மாசிலாமணி, த. இந்திரஜித், எஸ். நல்லையா, மாநிலத் துணைத் தலைவர்கள் எம். லகுமையா, சி.எம். துளசிமணி, பி. பெரும்படையார், மாநிலப் பொருளாளர் பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.